தமிழகத்தின் பிரபலமான ரேடியோ ஜாக்கியாக தனது கலகலப்பான பேச்சால் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த RJ பாலாஜி தமிழ் திரையுலகில் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். நகைச்சுவை நடிகராக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் RJ பாலாஜி LKG படத்தின் மூலம் கதையின் நாயகனாகவும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

இதனையடுத்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்த RJ பாலாஜி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குனராகவும் வெற்றி பெற்றார். LKG மற்றும் மூக்குத்தி அம்மன் படங்களின் வெற்றியை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியாக RJ பாலாஜி மற்றும் அவரது குழுவின் அடுத்த படைப்பாக தயாராகியுள்ளது TeamRJB3 (வீட்ல விசேஷங்க) திரைப்படம்.

முன்னணி தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ள RJ பாலாஜியின் வீட்ல விசேஷங்க படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற மார்ச் 18-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே RJ பாலாஜி அடுத்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியானது. இந்த புதிய படத்தில் RJ பாலாஜி மற்றும் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் டார்க் காமெடி த்ரில்லர் திரைப்படமாக உருவாகவுள்ள இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்குகிறார். யுவா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மதன் கணேஷ் படத்தொகுப்பு செய்யவுள்ளார். இன்று (மார்ச் 4 ஆம் தேதி) திரைப்படம் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.