மாணவர்கள் சமீப காலமாக சின்ன பிரச்சினைகளுக்கு கூட தற்கொலை செய்துகொள்ளும் நிலை அதிகரித்து உள்ளதாகவும், மாணவர்கள் தற்கொலை முடிவுக்குச் செல்லக்கூடாது எனவும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழக மாணவர்களுக்காக தமிழ்நாட்டின் டிஜிபி சைலேந்திர பாபு தனது முகநூலில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் பேசி உள்ள டிஜிபி சைலேந்திர பாபு, “கல்லூரி மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களான பெரும்பாலும் 18 வயதிற்கு உட்பட்டவர்களாகத் தான் இருப்பீர்கள். உங்களுக்கு, இந்த உலகத்தில் இன்னும் 60, 70 வருடங்கள் வாழ்வதற்கு நிறையவே நேரம் இருக்கிறது. இந்த நேரம் உங்களுடைய மிகப் பெரிய சொத்து. 

பின்னடைவு, சிறிய தோல்வி, குறைவான மதிப்பெண் எடுத்துவிட்டோம், வகுப்பு தலைவராக உங்களை நியமிக்கவில்லை என்கிற சின்ன சின்ன அற்ப காரணங்களுக்காக உங்களது உயிரை மாய்த்துக்கொள்ளலாமா?” என்று, அவர் மாணவர்களிடம் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

அந்த வீடியோவில் தொடர்ந்து பேசும் டிஜிபி சைலேந்திர பாபு “நம்மை நாமே கொலை செய்வது என்பது, மிகக் கொடூரமான மற்றும் தவறான முடிவு” என்றும், சுட்டிக்காட்டி உள்ளார். 

“மாணவர்களாகிய நீங்கள் இந்த நாட்டின் சொத்து என்றும், தற்கொலை என்பது சமுதாயத்திற்கு எதிரான குற்றம் என்றும், இந்த குற்றத்தை மாணவர்களாகிய நீங்கள் கண்டிப்பாக செய்யக்கூடாது என்றும், ஒரு நாட்டிற்கே முதல்வராகவோ, ஒரு அரசாங்கத்தின் தலைமை பொறுப்பான தலைமைச் செயலராகவோ, காவல் துறையின் தலைமை பொறுப்பிலோ, ஒரு விஞ்ஞானியாகவோ அல்லது தலைமை பொறுப்பிற்கோ வருவதற்கு எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கிறது. இப்படிப்பட்ட எந்த வாய்ப்பையும் நமது உயிரை மாய்த்துக்கொண்டால் நம்மால் அதனை அடைய முடியாது” என்றும், டிஜிபி சைலேந்திர பாபு சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், “மாணவர்களோ, உங்களின் பெற்றோர்கள் உங்களையே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களை வைத்து தான் அவர்களின் எதிர்காலம் இருக்கிறது என்று நினைக்கிறார்கள். 

நீங்கள் திடீரென்று உங்களின் உயிரை மாய்த்துக் கொண்டால் அவர்கள் படும் சிரமத்தை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டுமா? 

ஒருவேளை உங்களுக்கு தற்கொலை செய்துகொள்ளும் மனநிலை ஏற்படுமானால், உங்களின் அருகாமையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களிடத்தில் தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாமே” என்றும், டிஜிபி சைலேந்திர பாபு மாணவர்களுக்கு புதிய ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.

அத்துடன், “1090 என்ற உதவி மையத்தை தொடர்பு கொண்டால், அங்கேயும் உங்களுக்கு அறிவுரைகளும், ஆலோசனைகளை வழங்குவார்கள் என்றும், இதை விட தற்கொலை தடுப்பு மையம் உதவி எண்ணான 915298 7821 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்” என்றும், டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

அதே போல், “icallhelpline.org என்ற இனையதள உதவியையும் நாடலாம் என்றும், மாணவர்களே உற்சாகமாக இருங்கள். வரபோகும் தேர்வுகளுக்கு உடனடியாக உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். விரும்பி உங்களது பாடங்களை படியுங்கள். உங்களுக்கு படிப்பே சுகமானதாக இருக்கும்” என்றும், தமிழக மாணவர்களுக்கு பூஸ்டப் வார்த்தைகளை அறிவுரையாகவும், ஆலோசனையாகவும் டிஜிபி சைலேந்திர பாபு வழங்கி உள்ளார். 

இப்படியாக, டிஜிபி சைலேந்திர பாபு, மாணவர்களுக்காக பேசி வீடியோ வெளியிட்டுள்ளது, தற்போது தமிழகம் முழுவதும் பெரும் வைரலாகி வருகிறது.