திருப்பூர் மாநகரில் 22 வயது பெண்ணுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 55 வது வார்டில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

deepika appukutty

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 30-ல் தொடங்கி, வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. 

இதில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 5 வார்டுகளும், மதிமுகவிற்கு 3 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  இதையடுத்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி 25 வது வார்டில் பூபேஷ், 30வது வார்டில் முத்துலட்சுமி, 48 வது வார்டில் விஜயலட்சுமி, 51 வது வார்டில் செந்தில்குமார், 55 வது வார்டில் தீபிகா அப்புக்குட்டி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 55 வது வார்டில் போட்டியிடும் தீபிகா அப்புகுட்டிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு திருப்பூரில் 5 வார்டுகள் ஒதுக்கி இடப்பங்கீடு நேற்று இறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் தீபிகா அப்புக்குட்டி திருப்பூர் மாநகராட்சியின் முன்னாள் மேயராக பதவி வகித்த விசாலாட்சியின் மகள் ஆவார். அதிமுக சார்பில் மேயராக பதவி வகித்த விசாலாட்சி, சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தார். கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது திருப்பூர் தெற்கு தொகுயில் விசாலாட்சி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போதும் விசாலாட்சி அமமுகவில் தான் உள்ளார். தாய் அமமுகவில் இருக்கும் நிலையில், அவரின் மகள் தீபிகா அப்புகுட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் கவுன்சிலராக போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. 22 வயது ஆன தீபிகா அப்புகுட்டி கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

மேலும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது தொடர்பாக தீபிகா அப்புக்குட்டி பேசிய அவர், “சென்னையில் நான்காம் ஆண்டு எல்.எல்.பி. சட்டப்படிப்பு படித்து வருகிறேன். திருப்பூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து பெண்கள் வார்டுகளிலும் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தேன். கட்சி 55 வது வார்டில் போட்டியிட வாய்ப்பு அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப் போல பல பெண்களும் தேர்தலில் போட்டியிட்டு அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்கான தேர்தலில் போட்டியிடுகிறேன். இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். மேலும் எனது குடும்பம் அரசியல் குடும்பம் தான். அம்மா மேயராக இருந்துள்ளார். தற்போது அமமுகவில் இருக்கிறார். சிறு வயதில் இந்திரா காந்தி குறித்து படித்து வளர்ந்தேன். திராவிட சித்தாந்தத்தை விட காங்கிரஸ் சித்தாந்தம் பிடித்து இருந்ததால், காங்கிரஸ் கட்சிக்காக வேலை செய்ய வேண்டுமென இணைந்தேன்.

அதனைத்தொடர்ந்து சமூக வலைதளங்களிலும், வீடு வீடாக பரப்புரை செய்து வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளேன். சமூக சேவை செய்ய வேண்டுமென விரும்புகிறேன். 5 ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகல் இல்லாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மக்களின் குறைகளை தீர்த்து வைக்க விரும்புகிறேன். அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைக்க பணியாற்றுவேன்” என அவர் தெரிவித்தார்.