தமிழ் சினிமாவின் மிக முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ள நடிகர் யோகிபாபு, முன்னதாக தளபதி விஜய்யுடன் இணைந்து பீஸ்ட், அஜீத் குமாருடன் வலிமை, சிவகார்த்திகேயனுடன்  அயலான், விஜய் சேதுபதியுடன் கடைசி விவசாயி, விஷாலுடன் வீரமே வாகை சூடும் என அனைத்து முன்னணி நட்சத்திர நடிகர்களோடும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தனது கவுன்ட்டர் வசனங்களாலும் உடல் மொழியாலும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் யோகி பாபு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக பன்னிக்குட்டி காசேதான் கடவுளடா உள்ளிட்ட திரைப்படங்கள் யோகி பாபு நடிப்பில் விரைவில் வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக தனுஷின் கர்ணன் மற்றும் மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்களில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்த நடிகர் யோகிபாபு மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு  மிகவும் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் பொம்மை நாயகி. அறிமுக இயக்குனர் ஷான் இயக்கியுள்ள பொம்மை நாயகி படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் சார்பாக தயாரித்துள்ளார்.

யோகி பாபு உடன் இணைந்து சுபத்ரா மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள பொம்மை நாயகி படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு பொம்மை நாயகி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் நடிகர் யோகிபாபு பொம்மை நாயகி படத்திற்கான டப்பிங் பணிகளை தற்போது தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் பொம்மை நாயகி படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.