தமிழ் திரையுலகில் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் ராம், நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்த கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முன்னதாக இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த தங்கமீன்கள் திரைப்படம் 3 தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த நிலையில்  தொடர்ந்து தமிழ் திரையுலகிற்கு தனது சிறந்த படைப்புகளை வழங்கி வருகிறார் ராம்.

அந்த வகையில் அடுத்தடுத்து இயக்குனர் ராம் இயக்கத்தில் வசந்த் ரவி மற்றும் ஆண்ட்ரியா இணைந்து நடித்த தரமணி மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த பேரன்பு ஆகிய திரைப்படங்கள் தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பிடிக்கும் முக்கிய திரைப்படங்களாக கவனிக்கப்பட்டன. இதனிடையே அடுத்ததாக மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் ராம் தற்போது இயக்கி வருகிறார்

இயக்குநர் ராம் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் நிவின்பாலி மற்றும் நடிகை அஞ்சலி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு  ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இயக்குனர் மிஷ்கின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்துள்ள புகைப்படம் தற்போது வெளியானது. மேலும் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கில் தற்போது நடிகர் சூரி இணைந்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று இனியதொரு தொடக்கம்.  இயக்குனர் அண்ணன் ராம் மற்றும் பிரதர் நிவின் பாலி யுடன் முதல்முறையாக 'பயணிப்பதில்' பெரு மகிழ்ச்சி. அண்ணன் சுரேஷ் காமாட்சி க்கு நன்றி  என தெரிவித்துள்ளார்.  நடிகர் நிவின் பாலி, "இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடிகர் சூரியுடன் தொடங்கியுள்ளது. உங்களோடு இணைந்து பணியாற்றியது நிறைய கற்றுக் கொள்ளும் சிறந்த அனுபவமாக இருந்தது ராம் சார்" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இயக்குனர் ராம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்  புகைப்படங்கள் இதோ…