இந்திய திரை உலகின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா, தமிழ் திரையுலகில் ஈடு இணையற்ற சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் மிகச் சிறந்த இயக்குனராக திகழும் பாரதிராஜா அவர்கள் நடிகராகவும் தற்போது தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
 
முன்னதாக கடந்த ஆண்டு(2021) இறுதியில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்த ராக்கி திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்திருந்தார். இதனையடுத்து நடிகர் தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாராகி வரும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாரதிராஜா அவர்கள் தற்போது குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கொரோனா தொற்றில் இருந்து மீண்டு.. நலமுடன் இன்று வீடு திரும்பிவிட்டேன் நலம் விசாரித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி" என குறிப்பிட்டு 

வணக்கம்,
கொரோனா தொற்று ஏற்பட்டு ஒரு வாரகாலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.என் நண்பன் டாக்டர் திரு.நடேசன் அவர்களின் நேரிடை கண்காணிப்பில் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இன்று இல்லம் திரும்பி விட்டேன்.திரு.நடேசன் அவர்களுக்கும், பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த ஏனைய மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் தமிழக அரசு,அரசு மருத்துவர்கள், மாநகராட்சி ஊழியர்கள், என் உடல் நிலை குறித்து தொடர்ந்து தொலைபேசி, ஊடகங்கள் வாயிலாக நலம் விசாரித்த நண்பர்கள், இயக்குனர்கள், திரைத் துறை நண்பர்கள்,உறவுகள் அரசியல் பெருமக்கள் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மக்கள் தொடர்ந்து க்கவசங்களை அணிந்து , பொதுவெளியில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
பாரதிராஜா.

என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.