துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை மாதவரம் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் குமார், போக்ஸோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை மாதவரம் பால் பண்ணையில் சதீஷ் குமார் என்பவர், காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிவந்தார். 

உதவி ஆய்வாளர் சதீஷ் குமார், அதே பகுதியில் நியாய விலை கடையில் பணியாற்றிவரும் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் பழகி வந்துள்ளார்.

ஆனால், அந்த பெண், தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். அந்த பெண்ணுடன் ஏற்பட்ட பழகத்தின் காரணமாக, அந்த பெண்ணின் கணவர் தினமும் வேலைக்குச் சென்ற பிறகு, அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று வருவதைக் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில், அந்த பெண்ணுக்கு 10 வயதில் ஒரு மகள் இருந்து உள்ளார். இதனால், அந்த பெண்ணின் 10 வயது மகள் மீதும், அந்த உதவி காவல் ஆய்வாளருக்குச் சபலம் ஏற்பட்டு உள்ளது.

இதனால், தனது சபலத்தைப் கட்டுப்படுத்த முடியாத அந்த காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், “சிறுமியை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

போலீஸ் உதவி ஆய்வாளர் சதீஷ் குமாரின் இந்த கொடூரத்திற்குப் பின்னால், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயும், பெரியம்மாவும் உடந்தையாக இருந்துள்ளனர். 

அத்துடன், சிறுமிக்கு நடந்த இந்த பலாத்கார விஷயம், வெளியே தெரியாமல் இருப்பதற்காக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மாவுக்கு உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் செல்போன் மற்றும் பண உதவிகளையும் செய்து வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில், பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி, தனக்கு நேர்ந்த இந்த கொடுமைகளைத் தனது தந்தையிடம் கூறி அழுதிருக்கிறார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் குமார், சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மா ஆகியோர் மீது போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை அதிரடியாகக் கைது செய்தனர். இதனையடுத்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் 3 பேரும் தற்போது பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.