காட்டு யானை முன், சீறி பாய்ந்து நின்ற காளையின் வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

ஓசூர் அருகே காட்டு யானைக்கு எதிராக காளை மாடு ஒன்று சண்டைக்கு தயாராவது போல் சீறி பாய்ந்து நின்றுக்கொண்டிருந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்து உள்ள தேன்கனிக்கோட்டை நொகனுர், மரகட்டா, தாவரகரை ஒட்டிய வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதியில்  ஒற்றை காட்டு யானை ஒன்று, உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு சற்று வெளியே வந்து சுற்றி வந்துகொண்டிருந்தது. 

அப்போது, உணவு தேடி வந்த அந்த காட்டு யானை, வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் நுழைந்து, அங்குள்ள விவசாய பயிர்களை  அவ்வப்போது சாப்பிட்டு, அவற்றை நாசம் செய்து வருவதும் வழக்கமாக நடந்துகொண்டிருந்தது.

இந்த நிலையில் தான், அங்குள்ள தாவரகரை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் மாடுகள் கூட்டமாக அங்கு மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது, அங்கு வந்த ஒற்றை காட்டு யானை, திடீரென்று ஆக்ரோஷமாக காளை மாடுகளை விரட்டியது.

இதனால், அங்கு கூட்டமாக நின்ற மற்ற மாடுகள் அங்கிருந்து ஓடத் தொடங்கின. ஆனால், அதே நேரத்தில், அங்கிருந்த ஒரே ஒரு காளை மாடு ஒன்று, காட்டு யானையை காண்டு அஞ்சாமல், தனது முன்னங்கால்களால் நிலத்தை கிளறியபடி தில்லாக “முடிஞ்சா ஒத்தைக்கு ஒத்த வாடா” என்பது போல், எதிர்த்து நின்றது. 

சில நிமிடங்கள் அந்த காளை மாடும், அந்த யானையும் எதிர் எதிர் திசையில் நின்றிருந்த நிலையில், அந்த பகுதி மக்கள் அங்கு கூடி நின்று, இதனை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். சிலர், இதனை தங்களது செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கினார்கள். இதனால், சிறுது நேரத்திற்குப் பிறகு, காளை மாடும், யானையும் அங்கிருந்து வெவ்வேறு திசைகளில் பிரிந்து சென்றனர். 

எனினும், காட்டு யானை முன், சீறி பாய்ந்து நின்ற காளையின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. இதனைப் பலரும் தங்களது இணையதள பக்கங்களில் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.