“கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம், துளி அளவும் சந்தேகம் வேண்டாம்” என்று, சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டசபையின் 4 வது நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்து, 100 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன்” என்று, நினைவு கூர்ந்தார்.

“நீதிக்கட்சியின் தொடர்ச்சி அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கருணாநிதி, கருணாநிதியின் தொடர்ச்சியே நான்” என்றும் குறிப்பிட்டு பேசினார்.

அத்துடன், “அண்ணாவின் அரசியல் வாரிசு, கருணாநிதியின் கொள்கை வாரிசு நான்” என்றும், ஸ்டாலின் சுட்டிக்காட்டி பேசினார்.

“ 5 ஆண்டு கால ஆட்சி செய்யும் அரசு, கொள்கை மற்றும் திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது என்றும், ஆளுநர் உரை வெறும் ட்ரெயிலர் தான், மீதியை பொறுத்திருந்து பாருங்கள்” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக கூறினார்.

மேலும், “கடந்த 10 ஆண்டுகள் பொறுத்திருந்து திமுக ஆட்சிக்கு வந்து உள்ளதால், கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நாங்கள் நிறைவேற்றுவோம் என்றும், அதில் யாருக்கும் துளி அளவும் சந்தேகம் வேண்டாம்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார். 

முக்கியமாக, “ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே, தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம் என்றும், திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என பலரும் ஊடகங்கள் வாயிலாக வருத்தத்தை தெரிவிக்கின்றனர்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார். 

அதே போல், முன்னதாக பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திமுக அரசின் ஆளுநர் உரையில் யானையும் இல்லை, மணி ஓசையும் இல்லை என்றும் “யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே” என்ற பழமொழியை ஒப்பிட்டு பேசினார். 

அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “திமுகவை யானை என்று குறிப்பிட்டு பேசிய எதிர்கட்சித் தலைவருக்கு நன்றி என்றும், அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள் என்றும், திமுக அடக்க முடியாத யானை எனவும் பதில் அளித்தார். 

முக்கியமாக, “யானைக்கு பலமான 4 கால்களை போன்று திமுகவுக்கு சமூகநீதி, மொழிபற்று, சுயமரியாதை, மாநில உரிமை ஆகிய 4 கொள்கைகள் தான் பலம்” என்றும், அவர் குறிப்பிட்டு பேசினார். 

மிக முக்கியமாக, “மீத்தேன், நியூட்ரினோ, எட்டுவழிச்சாலை திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும்” என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.