தமிழக சட்டசபைத் தேர்தலில் கேப்டன் விஜயகாந்த், நடிகர்கள் பார்த்திபன், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த முறை வாக்களிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. 

நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கத்தில் 55.12 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 7 மணி வரை நடைபெற்றது. இதில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்தனர்.

முக்கியமாக, தமிழகத்திலுள்ள அரசியல் பிரபலங்கள் முதல், திரை பிரபலங்கள், மூத்த குடிமக்கள் என அனைவரும் உற்சாகமாக வாக்களித்தனர். 

மாலையில், வாக்குப்பதிவு முடிந்த உடன்  வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குப் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. 

சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த நிலவரம் தற்போதைய நிலவரம் என்றும் இதில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

குறிப்பாக சென்னையில் வில்லிவாக்கம் தொகுதியில் தான் 55.52 சதவீத வாக்குகள் மிக குறைவான அளவிலேயே பதிவாகி இருந்தன. அதே போல், தமிழகத்திலேயே அதிக பட்சமாக பாலக்கோட்டில் 87.33 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. சென்னைக்கு அடுத்தபடியாக குறைந்தபட்சமாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் 65 சதவீத வாக்குகளும், செங்கல்பட்டில் 68.18 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்காத சினிமா பிரபலங்கள் பற்றி சமூக வலைத்தளங்கில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கேப்டன் விஜயகாந்த், நடிகர்கள் பார்த்திபன், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த முறை வாக்களிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. 

குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதால் நேற்று சசிகலா வாக்களிக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும், ஜெயலலிதா உடன் காரில் சென்று வாக்களிப்பதை சசிகலா செய்து வந்தார். ஆனால், இந்த முறை வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கப்பட்டதால், அவரால் வாக்களிக்க முடியாமல் போனது. 

அதே போல், தேமுதிக தலைவர் விஜயகாந்த், வாக்களிக்க வராததால் அக்கட்சி  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி பள்ளியில், நேற்று காலை 7 மணிக்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மட்டும் தனியாக வந்து வாக்களித்தார். 

அத்துடன் “விஜயகாந்தும், தன் மகன்களும் பின்னர் வந்து வாக்களிப்பார்கள்” என்று, அவர் கூறிவிட்டுச் சென்றார். இதனைத் தொடர்ந்து, பிற்பகலில் விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோர் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

அப்போது, “தந்தை விஜயகாந்த் மாலையில் வந்து வாக்களிப்பார்” என்று, விஜய பிரபாகரன் கூறினார். 

இதனால், விஜயகாந்தின் வருகையை தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து அங்கேயே காத்திருந்தனர்.

தேர்தல் பிரச்சார காலத்தில், விஜயகாந்த் தேமுதிக தொண்டர்களையும் கூட்டணி கட்சியினரையும் ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். எனவே, விஜயகாந்த் நிச்சயம் வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு வருவார் என்று தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், வாக்குப்பதிவு நிறைவடையும் மாலை 7 மணி வரையிலும் நடிகர் விஜயகாந்த் அங்கு வரவில்லை. இதனால், காலை முதலே அங்கே காத்திருந்த தேமுதிகவினர் மிகுந்த ஏமாற்றமடைந்து, வருத்தத்துடன் வீடு திரும்பினர்.

அதே போல், “இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக, சட்டமன்ற தேர்தலில் தன் வாக்கைப் பதிவு செய்ய முடியவில்லை” என்று, நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

அத்துடன், “எனக்கு, ஏற்கனவே ஒவ்வாமை இருந்ததாலேயே இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும், மக்கள் அனைவரும் அவசியம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டார். 

முக்கியமாக, இந்த தேர்தலில் இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா, நடிகர் தனுஷ் உள்ளிட்ட ஏராளமானோர் வாக்களிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

“தி க்ரே மேன்” என்ற பெயரில் தயாராகும் ஹாலிவுட் படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில், “தி க்ரே மேன்” ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக தனுஷ் கடந்த பிப்ரவரி மாதமே அமெரிக்கா சென்று உள்ளார். அங்கு தங்கி இருந்து ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடிக்கிறார். மே மாதம் வரை படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு, அதன் பிறகே அவர் சென்னை திரும்புகிறார். இதனால், அவரால் நேற்றைய தினம் வாக்களிக்க முடியவில்லை. 

மேலும், இயக்குனர்கள் மணிரத்னம், வெற்றிமாறன், நடிகர்கள் கவுண்டமணி, வடிவேலு, கே.பாக்யராஜ், மோகன், கார்த்திக், ராஜ்கிரண், அரவிந்த் சுவாமி, பிரபுதேவா, லாரன்ஸ், விஷால் ஆகியோரும் வாக்களிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான விவாதங்களும் சமூக வலைத்தளங்களில் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளன.