நடிகை ஸ்ருதிஹாசன் மீது பாஜகவினர் புகார் அளித்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அளித்து உள்ளது. 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில் காலையிலேயே நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்தனர். தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. 

அத்துடன், கொரோனா தொற்று காரணமாக அனைத்து வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. 

இப்படியான சூழ்நிலையில், சென்னையில் வாக்களித்த நடிகரும், கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசனன், தனது மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் உடன் கோவைக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு, தான் போட்டியிடும் வாக்குச்சாவடிகளை அவர் தனது மகளுடன் சென்று பார்வையிட்டார்.

குறிப்பாக, சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகளைத் தவிர்த்து வாக்குச்சாவடிகளுக்குள் செல்லக்கூடாது என்ற விதி முறை உள்ள நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் அத்துமீறி நுழைந்ததது கண்டிக்கத்தக்கது என்றும், நடிகை ஸ்ருதிஹாசன் அத்துமீறி நுழைந்தது விதிமீறல் என்பதால், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாஜகவினர் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக நடிகை ஸ்ருதிஹாசன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்து உள்ளனர்.

அதே போல், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வந்த புகார் தொடர்பாக இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்கத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

அதாவது, தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது, தாராபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த உதயநிதி ஸ்டாலின், “முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோரின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம்” என்று, பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்” என்று புகார்கள் எழுந்தன.

இது உண்மைக்கு மாறான தகவல் என்று கூறிய பாஜகவினர், கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அத்துடன், மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் மகள், தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், இது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக சார்பில் ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று புகார் அளிக்கப்பட்டு இருந்தது. 

இந்த புகார் மனுவை விசாரித்த தேர்தல் ஆணையம், இது தொடர்பாக விளக்கம் அளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

அதில், “ஏப்ரல் 7 ஆம் தேதியான இன்று மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும், அதில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. இச்சம்பவம், தமிழக அரசியலில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.