“வரும் 4 வாரங்களுக்கு அனைவரும் உஷாராக இருக்க வேண்டும்” என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் 2 ஆம் அலையாக வீசிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் மிக முக்கியமான 8 மாநிலங்களில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏறுமுகமாக இருந்து வந்த நிலையில், அவை இந்த மாதத்திலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் நேற்று முன் தினம் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு பதிவாகி நாட்டு மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியது. 

அத்துடன், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

அதன் படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் படி, இது வரை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கையானது 1,26,86,049 லிருந்து 1,28,01,785 ஆக அதிகரித்து உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

மிக முக்கியமாக, கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 630 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், நாட்டில் கொரோனா பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 1,65,547 -லிருந்து 1,66,177 ஆக அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், “கொரோனா வைரஸ் பரவலில் அடுத்து வரும் 4 வாரங்கள் மிக நெருக்கடியாக இருக்கும்” என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலர் ராஜேஷ் பூஷன் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினரான விகே பால் ஆகியோர் கூட்டாகப் பேட்டி அளித்தனர். அப்போது, அவர்கள் பேசும் போது, “கொரோனாவின் 2 வது அலை முதல் அலையை விட, தற்போது மிக வேகமாக பரவதாக” கவலைத் தெரிவித்தார். 

“நாம் இதனைச் சமாளிக்க வேண்டும் என்றும், எதிர்கொள்வதோடு வீழ்த்தவும் வேண்டும்” என்றும், அவர்கள் கேட்டுக்கொண்டனர். 

 “இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பு அவசியம் என்றும் வலியுறுத்திய அவர்கள், அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானதாக இருக்கும்” என்றும், எச்சரிக்கையாகத் தெரிவித்தனர்.

“இதனால், ஒட்டு மொத்த நாடும் ஒன்றிணைந்து கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும், அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர். 

“கொரோனா பாதிப்பால் ஏற்படும் பலி எண்ணிக்கையைக் குறைப்பது தான் தடுப்பூசியின் முக்கிய நோக்கம் என்றும், மருத்துவத் துறையில் பணியாற்றுவோரைக் காப்பாற்றுவதும் அந்த திட்டத்தின் மற்றொரு முக்கிய நோக்கமாக” என்றும், அவர்கள் குறிப்பிட்டனர். 

மேலும், “கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் நபர்களைப் பாதுகாப்பதே எந்த ஒரு நாட்டின் நோக்கமாக இருக்கிறது என்றும், யார் விரும்புகிறார்களோ அவர்களுக்குத் தடுப்பூசி போடுவது இலக்கு அல்ல என்றும், யாருக்கு அதிக பாதிப்பு ஏற்படுமோ அவர்களுக்குத் தடுப்பூசி போடுவதோ இலக்கு” என்றும், அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதனால், பொது மக்கள் மீண்டும் கொரோனா பீதிக்கு ஆளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.