தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் நடிகர் யோகி பாபு. இவரது பெயர் இல்லாமல் திரைப்படங்கள் வெளியாவதே இல்லை என்றும் கூறலாம். சின்னத்திரை மூலம் அறிமுகமான இவர், தனது அயராத உழைப்பினால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பிரபலமாக மாறியுள்ளார். தற்போது யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. 

நடிகை அஞ்சலி மற்றும் யோகிபாபு இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு பூச்சாண்டி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை யோகி பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது வெளியான போஸ்டரில் கையில் ரோஸுடன் அஞ்சலிக்கு ப்ரொபோஸ் செய்கிறார் யோகிபாபு. பேய்கள் முன்னேற்ற கழகம் என நுழைவு வாயில் உள்ளது. திகில் பட விரும்பிகளை ஈர்க்கும் வகையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. 

கேஎஸ் சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கி வருகிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்க உள்ளார். அர்வி - மருதநாயகம் இணைந்து ஒளிப்பதிவு செய்கின்றனர். சுரேஷ் எடிட்டிங் செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அடுத்த மாதம் இந்த படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா உள்ளிட்ட முக்கிய நடிகைகளுடன் நடித்த யோகி பாபு தற்போது அஞ்சலியுடன் முதல் முறையாக இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

யோகிபாபு நடித்துள்ள ஜெகஜாலக்கில்லாடி, பிஸ்தா ஆகிய திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கிறது. இவர் நடிக்கவுள்ள சைத்தான் கா பச்சா, சதுரங்க வேட்டை2, அடங்காதே திரைப்படங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நின்று கொள்வான், பன்னிக்குட்டி, மண்டேலா, வெள்ளை யானை, கடைசி விவசாயி, கன்னி ராசி ஆகிய திரைப்படங்களின் வேலைகள் நடந்து கொண்டு வருகிறது.

சமீபத்தில் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள பேய் மாமா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து யோகிபாபு கைவசம் ட்ரிப் திரைப்படம் உள்ளது. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் இந்த படத்தில் நடிகை சுனைனா மற்றும் கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இதுதவிர்த்து தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தில் நடித்துள்ளார் யோகிபாபு.