உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கி, அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

கடந்த நவம்பர் 7-ம் தேதி கமல் ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, லோகேஷ் கனகராஜ் படத்தின் பெயருடன் கூடிய டீஸர் வெளியானது. விக்ரம் என தலைப்பிடப்பட்ட படத்தின் டைட்டில் டீஸரையும் வெளியிட்டது படக்குழு. விக்ரம் திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. 

சென்னையிலேயே ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்து, இந்தியன் 2 படத்திற்கு முன்பாகவே வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. வெளியான டீஸரில், தானே சமையல் செய்து கறி விருந்து வைக்கிறார் கமல். அரசியல்வாதிகள், காவல் அதிகாரிகள் ஆகியோர் முகமூடி அணிந்து கொண்டு கமலுடன் டேபிளில் அமர்ந்துள்ளனர். அதற்கு முன்பே தனக்கு தேவையான ஆயுதங்களை பதுக்கி தயாராக வைக்கிறார் கமல். ஆரம்பிக்கலாங்களா என்று கேட்டவுடன் அனிருத்தின் இசையுடன் விக்ரம் டைட்டில் கார்ட் தோன்றுகிறது. 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தீவிர கமல் ஹாசன் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் இந்த படத்தில் உலகநாயகனை எப்படி திரையில் காண்பிப்பார் என்ற ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் டீஸரை பார்த்த விஜய் சேதுபதி, சிறப்பு என்று பாராட்டியுள்ளார். விஜய் சேதுபதியின் இந்த பதிவிற்கு நன்றி அண்ணா என்று பதிலளித்துள்ளார் லோகேஷ். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நிறைவானது. மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்காலும், திரையரங்குகள் திறக்கப்படாததாலும் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. 

விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் வி.எஸ்.இந்து இயக்கி வரும் 19(1)(a) என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரிக்கவுள்ளது. இதற்கு இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா பணியபுரியவுள்ளார். சமீபத்தில் லாபம் மற்றும் துக்ளக் தர்பார் ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்தார் விஜய் சேதுபதி. 

இது தவிர்த்து மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, சீனு ராமசாமியின் மாமனிதன், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.