உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. 

இந்த வைரஸுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், பெரிய அச்சுறுத்தலை இந்த வைரஸ் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க லாக்டவுன் பிறபிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர். பின்னர், லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மூடப்பட்ட தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைய தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. புதிதாக இந்தத் தொற்றுக்கு ஆளாகிறாவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. தமன்னா, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஜெனிலியா, விஷால், ராஜமவுலி, மலைகா அரோரா, நடிகர் அர்ஜுன் கபூர், உள்பட பலருக்கும் பாதித்தது. அவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.

இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரே அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ஆச்சாரியா படத்தின் படப்பிடிப்பை துவங்குவதற்கு முன்னாள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும், அப்போது டெஸ்டில் பாசிட்டிவ் என வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இருமல், தும்மல் போன்ற அறிகுறிகள் ஏதும் இல்லாததால், வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தன்னை சந்தித்தவர்களை கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்ளும் படியும், விரைவில் தனது உடல் நிலை குறித்து கூறுவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சிரஞ்சீவிக்கு கொரோனா என்ற செய்தி அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக, சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் சிரஞ்சீவி. இவரது ஆச்சாரியா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் அவர் பிறந்தநாளில் வெளியானது. ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக மணிசர்மா, கலை இயக்குனராக சுரேஷ் செல்வராஜன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. பின் அதிலிருந்து விடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நிலை சரியானவுடன் ஆச்சாரியா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.