பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பு.. விராட் கோலிக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சன யுத்தம் நடத்தும் கம்பீர் - ஷேவாக்! 

பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலியை நீக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் காட்டமாக விமர்சனம் செய்து உள்ள நிலையில், கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நீக்கக்கூடாது என்று முன்னாள் வீரர் ஷேவாக் வற்புறுத்தி உள்ளார். 

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் நிலையில், இந்த போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில், நாளை இறுதி போட்டியும் நடைபெற உள்ளது. 

இந்த ஐபிஎல் தொடரில், கேப்டன் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினாலும், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், கேப்டன் விராட் கோலி மீது அடுத்தடுத்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னதாக கடைசியாக மும்பை அணியை எதிர்கொண்டு விளையாடிய போட்டியிலும், ஐதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியிலும் கேப்டன் விராட் கோலி, சக இந்திய இளம் வீரர்களை சீண்டினார் என்றும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. 

அதன் தொடர்ச்சியாக தற்போது பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலியை நீக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் காட்டமாக விமர்சனம் செய்திருந்தார்.

அதாவது, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக கடந்த 8 ஆண்டுகளாக இருக்கும் விராட் கோலி, இது வரை ஒரு முறை கூட வெற்றி கோப்பையை அணிக்காக வென்று கொடுக்க முடியவில்லை என்றும், கேப்டன் பதவி மீதான நம்பகத்தன்மைக்கு விராட் கோலி பொறுப்பேற்க வேண்டும் என்றும், இல்லா விட்டால் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலியை நீக்க வேண்டும்” என்றும், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். 

மேலும், “கோலி தானாக வந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என்றும், அணி நிர்வாகம் தான் இதில் ஒரு முடிவை எடுக்க வேண்டும்” என்றும், இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில், அதற்கு பதிலடி தரும் வகையில் முன்னாள் வீரர் ஷேவாக், “கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலியை நீக்கக்கூடாது” என்று, வற்புறுத்தி உள்ளார். 

“விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் போது சாதகமான முடிவுகளை கொண்டு வந்து அசத்துகிறார். அத்துடன், சர்வதேச ஒரு நாள் போட்டி, டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் வெற்றிகளைத் தேடித் தருகிறார். ஆனால், பெங்களூரு அணியின் கேப்டனாக பொறுப்பேற்கும் போது அவரது அணியினர் சிறப்பாக செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். 

“எப்போதும் ஒரு கேப்டன் சிறந்த அணியை பெற்றிருப்பது மிகவும் முக்கியம் என்றும், இதனால் பெங்களூரு அணி நிர்வாகம் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து மாற்றும் முயற்சியில் இறங்கக் கூடாது” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார். 

“அதற்குப் பதிலாக, பெங்களூர் அணியை எப்படி முன்னேற்றப்பாதைக்குக் கொண்டு செல்லலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அணியைப் பலப்படுத்த கூடுதலாக எந்தெந்த வீரர்களை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்பதை அணியின் நிர்வாகம் பார்க்க வேண்டும்” என்றும், அவர்  வலியுறுத்தி உள்ளார்.

மேலும், “ஒவ்வொரு அணியும் நிலையான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறது. ஆனால், பெங்களூரு அணியின் நிலைமை அப்படி இல்லை என்றும், அவர்கள் டிவில்லியர்சையும், விராட் கோலியையும் தான் முழுமையாக நம்பி இருக்கிறார்கள் என்றும், இது தான் அந்த அணிக்கு உள்ள முக்கியப் பிரச்சினையாக இருப்பதால், பேட்டிங் வரிசையை அடிக்கடி மாற்ற வேண்டி உள்ளது” என்றும், அவர் கூறியுள்ளார்.

அதே போல். “இந்த சீசனில் தேவ்தத் படிக்கல் குறிப்பிடத்தக்க வகையில் விளையாடி இருக்கிறார். ஆனாலும், பெங்களூரு அணிக்கு மற்றொரு திறமையான தொடக்க வீரரும், பின் வரிசைக்கு மேலும் ஒரு வலுவான வீரர் அந்த அணிக்கு மிகவும் அவசியம்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“பெங்களூர் அணியைப் பொறுத்தவரை வெற்றிகளை குவிப்பதற்கு இந்த 5 பேட்ஸ்மேன்கள் இருந்தால் போதும் என்றும், இதே போல் அவர்கள் தங்கள் அணியில் அங்கம் வகிக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மீதும் நம்பிக்கை வைத்து அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும்” என்றும், ஷேவாக் வலியுறுத்தி உள்ளார்.