சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்...இது வெறும் பெயர் மட்டுமல்ல, பல கோடி ரசிகர்களின் பாசிட்டிவ் மந்திரம். இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு 70 வயது ஆகிறது. வயது என்பது வெறும் எண் என்பதற்கு சூப்பர்ஸ்டாரை விட சிறந்த உதாரணம் இருக்கமுடியாது. இவரின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது: இந்தியத் திரைத்துறை வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியராக அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. நடுவர் குழுவில் இருந்த ஆஷா போன்ஸ்லே, சுபாஷ்கை, மோகன்லால், சங்கர், பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு நன்றி என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பழம்பெரும் பாலிவுட் நடிகர்கள் திலீப்குமார், சசிகபூர், வினோத் கன்னா, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் நடிகர் சிவாஜி கணேசன், இயக்குனர் பாலசந்தர் ஆகியோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து ரஜினிகாந்துக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலருமே மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கி வரும் இந்த படத்தை பெரும் பொருட் செலவில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், ஜகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு தளத்தில் நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.