2017 ஆம் ஆண்டு ஸ்ரீ, சந்தீப் கிருஷ்ணன், முனிஸ்காந்த் நடிப்பில் வெளியாகி எதிர்பாராத வெற்றியை பெற்ற திரைப்படம் 'மாநகரம்'. இந்த திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். தற்போது இந்த படம் பாலிவுட்டில் மும்பைகார் என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது . 

இந்த படத்தின் மூலம் முதன்முறையாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தேசியவிருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வருகிறார்.

படத்தில் விக்ராந்த் மாசே, தான்ய மாணிக்தலா, ஹிர்து ஹரூன், சஞ்சய் மிஸ்ரா, ரன்வீர் ஷோரே, சச்சின் கடேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை ஷிபு தமின்ஸ் தயாரித்துள்ளார். தமிழில் முனிஸ்காந்த் நடித்த ரோலில் இந்தியில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

அண்மையில கோட், சூட், கூலிங்கிளாஸ் கண்ணாடியுடன் ஸ்டைலாக இருக்கும் விஜய்சேதுபதியின் அட்டகாசமான புகைப்படம் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. குழந்தை அருகில் கையில் துப்பாக்கியுடன் விஜய் சேதுபதி தோன்றியதால், தமிழில் முனிஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் தான் பாலிவுட்டில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்ற செய்தி உறுதியானது. 

மும்பைகார் படத்தை தொடர்ந்து கிஷோர் பாண்டுரங் இயக்கும் காந்தி டாக்ஸ், அந்தாதூன் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் மெரி கிறிஸ்துமஸ் போன்ற இந்தி படங்களிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதுதவிர ஷாஹித் கபூருடன் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஒரே யாவரும் கேளிர், மாமனிதன் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.