“நரேந்திர மோடி, அமித்ஷா, நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு திடீர் தமிழ் காதல் ஏன் வந்தது?” என்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாநில சட்ட மன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனால், இந்தியாவின் முக்கிய தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் படி, முன் எப்போதும் இல்லாத வகையில், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இந்த முறை தமிழகத்தின் பக்கம் தங்களது கவனத்தைத் திருப்பி உள்ளன.

இதன் காரணமாக, காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல் காந்தி பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் நடைபெறும்  ஜல்லிக்கட்டு போட்டியை காண மதுரைக்கு வருகை தந்தார். அப்போது, தமிழர்களின் கலாச்சாரம் தனக்கு மிகவும் பிடிதத்திருப்பதாகவம், தமிழகத்தின் கலாச்சாரத்தைக் காக்க நானன் துணை நிற்பேன் என்றும், அவர் சூளுரைத்தார்.

அதே போல், பாஜகவின் முக்கிய தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து தொடர்ந்து தமிழகம் வந்த பிரச்சாரங்களில் கலந்துகொண்டும், மக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இந்நிலையில், “நரேந்திர மோடி, அமித்ஷா, நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு திடீர் தமிழ் காதல் ஏன்?” என்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுப்பி உள்ள கேள்வியில், “தமிழ்நாடு பெரியார் மண், திராவிட மண், சமூக நீதி மண் என்பதை எப்படியாவது மாற்றிவிட பல்வேறு உத்திகளையும், வித்தைகளையும் கைமுதலாகக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் - பாஜக என்ற ஆரியத்தின் அரசியல் வடிவம் இறங்கி உள்ளது” என்று, பகிரங்மாக குற்றம்சாட்டி உள்ளார்.

அத்துடன், “தமிழ்நாட்டு மக்களுக்கு, வாக்காளர்களுக்கு வலை வீசிட இப்போது ஒரு புது முறை ஒன்றை வடக்கே இருந்து வந்து தமிழ் நாட்டைப் பிடிக்க எண்ணும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக தலைவர்கள் கையாளத் தொடங்கி உள்ளனர்” என்றும். கவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும், “பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்கள் பலரும் தமிழ் மொழி, திருக்குறள், தமிழ் இலக்கியத்தின் பாடல்கள், தமிழ் கலாச்சாரத்தின் பழைமை, பெருமை பற்றிப் பேசி, 'அய்யோ, எங்களால் இந்த அழகிய தமிழ் மொழியைப் படிக்க முடியவில்லையே' என்று கவலையுடன் கூறி, வானவில் போல் பல வண்ண வண்ண வேடிக்கைகளை விட்டுச் செல்லுகின்றனர்” என்றும், அவர் குற்றம்சாட்டி உள்ளார். 

“இவர்களுக்கு இப்போது திடீர் தமிழ்க் காதல் பீரிட்டுக் கிளம்ப வேண்டியதன் அவசியம் என்ன? என்றும், இந்த தமிழ்ப் பம்மாத்து வேடம் இங்கே செல்லாது” என்றும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்து உள்ளார்.