கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பன்னீர்செல்வம். முதல் படத்திலேயே ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார் பன்னீர்செல்வம். அதன் பின்னர் ரேணிகுண்டா பட ஹீரோ வைத்து 18 வயசு என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் தான் நடிகை காயத்ரி திரைத்துறைக்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2017-ம் ஆண்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடித்த கருப்பன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமானது. கிராமப்புற பகுதிகளில் பட்டையை கிளப்பியது என்றே கூறலாம். இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, விஜய் சேதுபதியின் கெட்டப் என இன்று தமிழ் சினிமா ஆடியன்ஸ் விரும்பி பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. 

இந்த படத்திற்கு பிறகு நான் தான் சிவா என்ற படத்தை இயக்கினார். வினோத், அர்ஷிதா நடித்த இந்த படம் வெளியாகாமல் இருந்தது. இதனை திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருந்தனர். இந்நிலையில் இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது. இந்த படத்திற்கு ஐஸ்வர்யா முருகன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் கணேஷ் ராகவேந்திரா என்பவர் இசையமைக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனா ஒளிப்பதிவும், ஜான் ஆபிரகாம் என்பவரின் படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.ஆர். வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் இந்த படத்தை தயாரிக்கின்றனர். ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை வெளியிடுகிறது. 

இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா முருகன் என்ற பெயர், காதல் படத்தில் வரும் பரத் மற்றும் சந்தியா நடித்த பாத்திரத்தின் பெயர்களாகும். அந்த படத்தின் பாத்திரங்கள் போலவே காதல் ஜோடிகளின் கதையாக இருக்குமோ என்று யூகிக்க துவங்கி விட்டனர் திரை ரசிகர்கள்.