மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ராஜிஷா விஜயன், லால், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் இன்று (மார்ச் 31) நடைபெற்றது. ஹாலிவுட் படத்துக்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதால் தனுஷ் கலந்து கொள்ளவில்லை. அவரைத் தவிர்த்து இதர அனைத்துப் படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள்.

வெளிநாட்டில் இருந்து தனுஷ் அனுப்பிய கடிதம் பத்திரிகையாளர் சந்திப்பில் வாசித்துக் காட்டப்பட்டது. அந்தக் கடிதத்தில் தனுஷ் கூறியிருப்பதாவது: சீக்கிரம் வருவேன். கர்ணன் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். நான் ஸ்பெஷலா நினைக்கிற, கொண்டாடுற நிறைய பேர் இந்தப் படத்துல இருக்காங்க. இந்தப் படம் எனக்கு ஒரு நடிகனா, மனிதனா நிறைய விஷயங்கள் கத்துக் கொடுத்துச்சு. 

மாரி செல்வராஜோட உறுதியும், அவரோட மனிதத் தன்மையும் தினம் தினம் ஆச்சரியமா இருந்தது. ஒரு நபர், மாரி மாதிரி ஒரு நல்ல மனிதராக இருக்க முடியுமான்னு நான் அடிக்கடி யோசிப்பேன். என்னைய உங்க கர்ணனா மாத்துனதுக்கும், என் வாழ்க்கைல நீங்க வந்ததுக்கும் ரொம்ப நன்றி மாரி. எப்பவும் இப்படியே இருங்க. உங்களுக்கு ஒரு ஸ்பெஷலான இடம் காத்துக்கிட்டு இருக்கு.

என்னையும் நான் தேர்ந்தெடுக்கிற கதைகளையும் அவ்ளோ நம்புற தாணு சாருக்கு என் நன்றி. அவர் என் மேல வச்சிருக்கிற கண்மூடித்தனமான நம்பிக்கை, எனக்கு ஒரு நடிகனா இருக்கிற பொறுப்புகளை ஞாபகப்படுத்திடே இருக்கு. இன்னும் அதிகமா உழைக்கணும், அப்படிங்கிற சக்தியைக் கொடுத்துக்கிட்டே இருக்கு. நம்ம மண்ணோட இசை வழியாகவும், அந்த மண்ணின் கலைஞர்கள் மூலமாகவும் சந்தோஷ், கர்ணனுக்கு யானை பலத்தைச் சேர்த்திருக்கார். அவருக்கு நன்றி. எனக்கு நல விரும்பிகள் கம்மிதான். என்னோட உண்மையான நல விரும்பிகளாக இருந்ததுக்கு ரொம்ப நன்றி சந்தோஷ்.

இந்த இடத்துல நான் மீனா சந்தோஷுக்கும் என் நன்றியைச் சொல்லணும். அவங்கதான் எனக்கு மாரி செல்வராஜை அறிமுகப்படுத்தி வச்சாங்க. நன்றி தேனி ஈஸ்வர் சார். உங்களோட பணியைப் பார்த்த எல்லாரும் அத அவ்ளோ நேசிக்கிறாங்க. வாழ்த்துகள் சார்.

கர்ணன் படக்குழுவினருக்கும், அவங்க அர்ப்பணிப்பு, அன்பு, ஆதரவு எல்லாத்துக்கும் நன்றி. இந்தப் படத்துக்காக உடல்ரீதியா, மனரீதியா, உணர்ச்சிரீதியா என்னை விட அதிகமான உழைப்ப அவங்க எல்லாருமே போட்டிருக்காங்க. கர்ணன் இவ்ளோ நம்பகத்தன்மையோட இருக்கு அப்படின்னா அது அவங்க எல்லாரோட கடும் உழைப்பால தான்.

எனக்குத் தொடர்ந்து ஆதரவும், அன்பும் அளித்துவரும் என் ரசிகர்களுக்கு நன்றி. நான் என்னோட சிறந்த நடிப்பைக் கொடுக்க எப்போதுமே முயற்சி பண்றேன். கர்ணன் உங்க எல்லாரையும் சந்தோஷப்படுத்தும்னு நம்புறேன். இங்க வந்ததுக்கு எல்லாருக்கும் மறுபடியும் நன்றி. கர்ணன் வருவான், சீறும் கேள்விகளை ஏந்தி வருவான் என்று தனுஷ் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் நான்காம் பாடல் கர்ணனின் யுத்தமான உட்றாதீங்க எப்போவ் பாடல் வீடியோ வெளியானது. தீ பாடிய இந்த பாடல் வரிகளை மாரி செல்வராஜ் எழுதியுள்ளார்.