நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை தளபதி 65 என்று அழைத்து வருகிறது படக்குழு. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தின் பாடலுக்கு நடனம் அமைக்க உள்ளதாக நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் ட்வீட் செய்திருந்தார். சில மணித்துளிகளில் இந்த ட்வீட்டை நீக்கிவிட்டார். ஆனாலும், இந்த ட்வீட்டை ஸ்கிரீன் ஷாட் எடுத்து விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். 

அப்போது இணையவாசி ஒருவர் ஜானி மாஸ்டரின் ட்வீட்டைப் பகிர்ந்து, அருமை. ஷோபி மாஸ்டர், தினேஷ் மாஸ்டர், ஸ்ரீதர் மாஸ்டர், சதீஷ் மாஸ்டர், ஷெரீஃப் மாஸ்டர், ராஜுசுந்தரம் மாஸ்டர் ஆகியோரால் போரடிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஷாந்தனு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ராஜு மாஸ்டர், ஷோபி மாஸ்டர், ஸ்ரீதர் மாஸ்டர், தினேஷ் மாஸ்டர், சதீஷ் மாஸ்டர், ஷெரீஃப் மாஸ்டர் உள்ளிட்ட பலரது நடன இயக்கத்தைத்தான் இவ்வளவு வருடங்களாக நாம் ரசித்து வந்திருக்கிறோம். எனவே, எப்போதும் இப்படிப் பேசாதீர்கள். ஜானி மாஸ்டர் மிகச் சிறந்த திறமைசாலிதான். அவரையும் ஊக்குவிப்போம். ஆனால், அதற்காக மற்றவர்களைத் தரக்குறைவாகப் பேச வேண்டாம் என்று பதிவு செய்துள்ளார். சாந்தனுவின் இந்த பதிவு பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. 

வானம் கொட்டட்டும் படத்திற்கு பிறகு தளபதி விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் ஷாந்தனு. ஷாந்தனு நடிப்பில் உருவாகி வரும் படம் முருங்கைக்காய் சிப்ஸ். ஸ்ரீஜர் இந்த படத்தை இயக்குகிறார். ஷாந்தனுவின் தந்தையும் பிரபல இயக்குனருமான பாக்யராஜ் முக்கிய ரோலில் நடிக்கிறார். 

இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இராவண கோட்டம் படத்தில் நடித்து வருகிறார் ஷாந்தனு. கண்ணன் ரவி தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.