தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா. திரைக்கு பின்னாலும் ஹீரோவாக திகழும் சூர்யா பல மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். நடிகர் சூர்யா படங்கள் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். 23 ஆண்டுகள் தன் நடிப்பின் மூலம் ஆறிலிருந்து அறுவது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெற்ற ஆதர்ஷ நாயகன்.

சூரரைப் போற்று வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சூர்யா. இந்த படத்தின் படப்பிடிப்புதான் முதலில் தொடங்கவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரியிலிருந்து படப்பிடிப்புக்கு செல்லப் படக்குழு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இப்படம் குறித்துப் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. பாண்டிராஜ் படத்தில் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார், நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாவதை காண முடிகிறது. 

இது தொடர்பாக நீண்ட நாட்களாக அமைதி காத்து வந்த இயக்குனர் பாண்டிராஜ், தற்போது தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, அன்புள்ள நண்பர்களே, சூர்யா 40 குறித்த உங்கள் ஆர்வத்தை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. தயவுசெய்து வதந்திகளை நம்ப வேண்டாம். விரைவில் நடிகர்கள் குறித்த அறிவிப்பைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும். சிறப்பான படத்தை உங்களுக்குத் தர நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம் என பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் வைத்து நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தை இயக்கியிருந்தார் பாண்டிராஜ். ஏற்கனவே சூர்யாவை பசங்க 2 படத்தில் இயக்கியிருப்பார். சூர்யாவுடன் இரண்டாவது முறையாக இணையும் இயக்குனர் பாண்டிராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இந்த திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளில் வாடிவாசல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வாடிவாசல் என்ற நாவலை எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுத்தில் 1959-ம் ஆண்டு வெளியானது.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ஆந்தாலஜி படத்தின் படப்பிடிப்பை முடித்தார் சூர்யா. கெளதம் மேனன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.