நிவர் புயல் நேரத்தில் பொது மக்கள் எந்தெந்த முன்னெச்சரிக்கை எல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

நிவர் புயல் நெருங்கி வந்த நிலையில், தற்போது அது வலுப்பெற்று இன்று இரவு தீவிர புயலாக மாறுகிறது. தற்போது சென்னைக்கு அருகே 470 கிலோ மீட்டர்  
தொலையில் மையம் கொண்டுள்ளது. இதனால், கன மழை கொட்டித் தீர்க்க உள்ளது. நிவர் புயல், நாளை பிற்பகல் நேரத்தில் சென்னை மகாபலிபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், புயல் காலங்களில் பொது மக்கள் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, தமிழக 
அரசு உட்பட பலரும் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாகத் தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடம் மேலாண்மை ஆணையம் சார்பிலும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

அதன் படி,

- அத்தியாவசிய பொருட்களான பேட்டரியில் இயக்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்களைத் தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

- குடி நீர் மற்றும் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை முன்கூட்டியே இருப்பு வைத்துக்கொள்வது நல்லது.

- போதுமான அளவில் அரிசி, மளிகைப் பொருட்கள், படுத்து உறங்க ஓய்வு எடுக்கப் பாய் மற்றும் போர்வை போன்ற வசதிகளை முன்கூட்டியே தயார் படுத்தி வைத்திருக்க வேண்டும்.

- புயல் பாதிப்பு உள்ளாகக்கூடிய பகுதியில் வசிக்கும் மக்களும், பாதுப்பு முறையில் இல்லாத வீடுகளில் வசிக்கும் மக்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும்.

- ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களை பொது மக்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

- செல்போன், டார்ச் லைட் உள்ளிட்ட பொருட்களை முன் கூட்டியே சார்ச் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

- பலத்த காற்று வீசும் போது மரங்கள் விழ வாய்ப்பு இருப்பதால், பாதுகாப்பு கருதி, பொது மக்கள் முதலில் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்க வேண்டும்.

- வீடுகளில் உள்ள மனி சாதனப் பொருட்களை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்.

- மின் கம்பிகள், தெரு விளக்கு கம்பங்கள், மின் மாற்றிகள் உள்ளிட்ட மின்சாதனங்கள் பொருத்தப்பட்ட இடங்களில் மிக அருகில் செல்லவோ, அவற்றைத் தொடவோ வேண்டாம்.

- பேட்டரி மூலம் இயங்கும் வானொலி பெட்டியில் அறிவிக்கப்படும் வானிலை நிலவரங்களைக் கேட்டறிந்து அதன்படி, பொது மக்கள் செயல்பட வேண்டும்.
 
- வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்களைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்க வேண்டும்.

- வீட்டைச் சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

- வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளையும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பது மிக அவசியம்.

அதே போல், நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை மக்கள் 1913 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என்றும், 044-2538 4530, 044-2538 4540 என்ற அவசர எண்களிலும் பொது மக்கள் புகாரளிக்கலாம் என்றும், சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.