புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஒவ்வொரு நிலைக்குமான காரணம் என்ன? மற்றும் ரெட் அலெர்ட் உள்ளிட்ட அலெர்ட் ஏன் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தை தாக்க உள்ள நிவர் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுச்சேரியில் இன்று மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதன் காரணமாக, ஒவ்வொரு பகுதியில் பெய்யும் கன மழை மற்றும் புயல் காற்று வீசும் அளவைப் பொருத்து, புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஒவ்வொரு நிலையாக ஏற்றப்பட்டு, சில வண்ண நிறங்களில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் படி, கடற்கரையோரம் உள்ள துறைமுகங்களில் அபாயத்தின் அளவைப் பொருத்து ஒவ்வொரு நிலையிலும் எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
 
புயல் காலங்களில் ஒன்று முதல் 11 வரையிலான புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம்.  இதற்காக, கடற்கரையோரம் உள்ள துறைமுகங்களில் 
பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்பட்டு வருகிறது.

அதுவே இரவு நேரங்கள் என்றால், வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றுவது வழக்கம். 

இந்த நிலையில், “ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், அது “புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக” அர்த்தம் கொள்ளப்படுகிறது. இதனால், “துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும்” என்பதற்கு அதற்குப் பொருள் கொள்ளப்படுகிறது. 

“2 ஆம் எண் கூண்டானது, புயல் உருவாகி உள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையானது, துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும்” என்று அர்த்தமாகும். 

“3 ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுவது, திடீர் காற்றோடு மழை பெய்யும் வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்” ஆகும். 

“4 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து என்பதைக் குறிக்கும்” பொருள் ஆகும்.

“5 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு, புயல் உருவாகி இருப்பதை குறிக்கிறது. அத்துடன், துறைமுகத்தின் இடது பக்கமாகப் புயல் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை” ஆகும்.

நிவர் புயல் காரணமாக, நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் தற்போது இந்த 5 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு தான் ஏற்றப்பட்டு உள்ளது.  

“6 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டானது, வலது பக்கமாகக் கரையைக் கடக்கும் போது, துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படுத்தப்படும்” என்பதைக் குறிப்பதாகும்.

“7 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும். தற்போது உருவாகி உள்ள இந்த நிவர் புயல் வலுப்பெற்று வரும் நிலையில், தற்போது கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் இந்த 7 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு தான் ஏற்றப்பட்டு உள்ளது.

“8 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், மிகுந்த அபாயம் என்று பொருள். அதாவது, புயல் தீவிர புயலாகவோ, அதிதீவிர புயலாகவோ உருவெடுத்து, துறைமுகத்தின் இடது பக்கமாகக் கரையைக் கடக்கும்” என்பது அதன் அர்த்தம் ஆகும்.

“9 ஆம் எண் எச்சரிக்கை கூண்டுக்கு, புயல் தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது” என்று பொருள். 

“10 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், அது அதி தீவிர புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அருகே கடந்து சென்று, பெரும் அபாயம் ஏற்படுத்தும்” என்பது அதன் பொருள்.

குறிப்பாக, “11 ஆம் எண் கூண்டு தான் இருப்பதிலேயே மிகவும் உச்ச பட்சமானது. இந்த எச்சரிக்கையானது, வானிலை மையத்துடனான தொடர்பு முற்றிலும்  துண்டிக்கப்பட்டுள்ளது” என்று பொருள். அப்படியென்றால், அதன் தீவிரத்தையும், அதனால் ஏற்படும் பாதிப்பையும், நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே அதன் பொருள்.

அதே போல், புயல் மற்றும் மழைக்காலங்களில் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்ச், பச்சை என சில வகையான எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுக்கிறது. இந்த வகையான எச்சரிக்கைகள், சில அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

அதன் படி, பச்சை எச்சரிக்கையானது, மழை பெய்யும் அறிகுறி தென்பட்டாலே வெளியிடப்படும்.  பச்சை நிறம் லேசானது முதல் மிதமான அளவு வரை குறிப்பதாகவும்.

இதற்கு அடுத்த படியாக, மஞ்சள் நிற எச்சரிக்கை இருக்கிறது. இதில், வானிலை மோசமாக இருக்கிறது என்பதைத் தெரிவிக்கும் விதமாக இருக்கும். மஞ்சள் எச்சரிக்கையின் போது 64.5 மில்லி மீட்டர் முதல், 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்பது அர்த்தம் ஆகும்.

குறிப்பாக, தமிழகத்துக்கு தற்போது மஞ்சள் எச்சரிக்கையே விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொருட்சேதம் அல்லது உயிர் சேதம் ஏற்படும் அளவிற்கு வானிலை மோசமாக இருக்கும் போது வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அல்லது ஆம்பர் எச்சரிக்கையை விடுக்கிறது. இது போன்ற சமயங்களில் 115.6 மில்லி மீட்டர் முதல் 204.4 மில்லி மீட்டர் அளவிற்குக் கனமழை பெய்யும் என்பது அர்த்தம் ஆகும்.

ரெட் அலர்ட் என்னும் சிவப்பு எச்சரிக்கையானது, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அளவிலும், போக்குவரத்து, மின்சாரம், இணையம் உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கும் வகையிலும் மிக கனமழை பெய்யும் போது விடுக்கப்படுகிறது. ரெட் அலர்ட்டின் போது 204.5 மில்லி மீட்டருக்கு மேல் மிக கனமழை பெய்யக் கூடும் என்பதே அதன் பொருள் ஆகும்.