நிவர் புயல் நாளை பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, புயலை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக மற்றும் புதுச்சேரி அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் கிராமங்கள் தோறும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

தண்ணீர் வரத்து அதிகரிக்கலாம் என்பதால் வயல்வெளிகளில் தேங்கியுள்ள நீரை விவசாயிகள் அப்புறப்படுத்தி வருகின்றனர். விவசாயத்திற்காக மதகுகளில் தேக்கிவைக்கப்பட்டிருந்த தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போதே பல இடங்களில் காற்றுடன் மிதமான வேகத்தில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. மின் தடை ஏற்படலாம் என்பதால் செல்போன் உள்ளிட்டவற்றில் சார்ஜ் செய்து வைக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். நிவர் புயலுக்கு தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த அவர், தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என முதல்வர் பழனிசாமியிடம் உறுதி அளித்துள்ளார். அதேபோலவே, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம் பேசிய பிரதமர், புதுச்சேரிக்கு தேவையான உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று கூறியுள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி முதல்வர்களிடம் பேசினேன். சாத்தியமான அனைத்து ஆதரவுகளையும் மத்திய அரசு வழங்கும். பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.