சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை கொட்டி தீர்க்கும் என்று, வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தையே அச்சுறுத்தி வரும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நிவர் புயலாக மாறி உள்ள நிலையில், 25 ஆம் தேதியான நாளைய தினம் சென்னை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என்று, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நிவர் புயல் காரணமாக, மிக கன மழையுடன் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யக் கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது புதிய எச்சரிக்கை விடுத்து உள்ளது. 

புயலால், சென்னையில் நேற்று இரவு முதல் பெய் கன மழை காரணமாக, சென்னையின் பல்வேறு முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியிருப்பதால், வாகன ஒட்டிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். நிவர் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பரவலாகக் கன மழை கொட்டி தீர்த்தது. 

இதனால், சென்னை மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீர் முற்றிலும் வடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கே.கே. நகர் பி.டி. ராஜன் சாலையில் இரண்டு அடிக்கு மேலாக மழை நீர் தேங்கி நிற்பதன் காரணமாக வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். அதேபோல், வடபழனி 100 அடி சாலையிலும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியிலும் செல்ல முடியாமல் வாகன ஓட்டிக்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டனர்.

சென்னை நகரின் பல இடங்களிலும் சாலையோரம் நின்றிருந்த சில மாரங்கள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாகவும், போக்கு வரத்து பெரும் அளவும் பாதிக்கப்பட்டது. தற்போது, சாலையில் விழுந்த மரங்களை வெட்டி எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது, சென்னையில் பல பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கி உள்ளது. அதன் படி, தி.நகர், நந்தனம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், தேனாம்பேட்டை, கொட்டிவாக்கம், திருவான்மியூர், அடையார், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

முன்னதாக, “கனமழை காரணமாகப் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளும் இன்று மதியம் ஒரு மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது” என்றும், தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார். 

அத்துடன், பொது மக்கள் அத்தியாவசிய தேவைகளைத் தவிர, பிற தேவைகளுக்காகப் பயணங்கள் மேற்கொள்வதை முற்றிலும் உடனடியாக தவிர்க்க வேண்டும் என்றும், தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. 

மேலும், நிவர் புயல் கரையை கடக்கும் வரை, கல்பாக்கம் அணு உலை ஊழியர்கள், குடும்பத்தினர் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே புயல் கரையை கடக்க உள்ள நிலையில் கல்பாக்கம் பணியாளர்களுக்கு இந்த அறிவுரையானது வழங்கப்பட்டு உள்ளது.

அதே போல், “புயல் கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், புயல் குறித்துப் பதற்றமடைய வேண்டாம் என்றும், அதே நேரத்தில் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டு உள்ளார்.