நிவர் புயல் காரணமாக கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டையே தற்போது நிவர் புயல் அச்சுறுத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயலை சந்தித்த காவிரி டெல்டா மாவட்டங்கள் இந்த ஆண்டு, புதிதாக நிவர் புயல் என்னும் பெயரில், மீண்டும் ஒரு புயலை சந்திக்கக் காத்திருக்கிறது. இதனால், பொது மக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் புயலில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள பல்வேறு முன் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது உருவாகி உள்ள நிவர் புயல், சென்னைக்குக் கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என்று, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 

இது, தீவிர புயலாக வலுப்பெற்று, நிவர் புயல் நாளை கரையைக் கடக்க உள்ளது. 

அதன் படி, காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. 

குறிப்பாக, நிவர் புயல் உருவாகி உள்ள இந்த சூழலில், கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் தற்போது 7 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அங்கு ரெட் அலர்ட் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

முக்கியமாக, துறைமுகம் வழியாகவோ அல்லது அதன் அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதே 7 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதன் விளக்கம் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக, நிவர் புயல் காரணமாக பொது மக்கள் மற்றும் மீனவர்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாகை, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 5 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அதன் படி, நேற்று 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிவர், பின்னர் படிப்படியாகக் குறைந்து, 15 கிலோ மீட்டராக குறைந்தது. இன்று காலை நான்கு கிலோ மீட்டர் வேகத்தில் வந்த நிலையில் தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் நிவர் புயல் நகர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

அதே போல், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தை அந்த மாவட்ட சப் கலெக்டர்  ஆனந்த்மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார். 

அத்துடன், நிவர் புயலால் பாதிக்கப்படக் கூடிய மாவட்டங்களில் ரேஷன் கடைகளை முன் கூட்டியே திறக்கலாம் என்றும், அமைச்சர் காமராஜ் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.