உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார்  6 லட்சத்து 60 ஆயிரத்தை தொட்டுள்ளது. இந்தியாவில், நாளொன்றுக்கு உயரும் பாதிப்பு எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது. இறப்பு விகிதமும் குறைவாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தொடர்ச்சியாக கூறிவருகின்றார். 

கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்துவந்தாலும், அதனால் ஏற்படும் தீவிரம் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது. இருப்பினும், ஓரளவுக்கு ஆறுதல் தரும் விஷயமாக, கொரோனா வைரஸ் தொற்று பெரும்பாலும் குழந்தைகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று நிம்மதி இருக்கின்றது. அப்படியான சூழ்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெரியவர்களால்,  குழந்தைகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிம்ஸ் எனும் நோயால் குழந்தைகள் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை குறைந்த அளவிலும், 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை, அதிக அளவிலும் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது .

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் முதியவர்கள் குழந்தைகளுடன் இருக்கும் போது, அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. 2 அல்லது 3 வாரங்கள் கழித்து குழந்தைகளுக்கு உடலில் சிறு பாதிப்புகள் ஏற்படுகிறது.ஏப்ரல் மாதத்தில் பல நாடுகளில் ஆய்வின் மூலம் இவை உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஜூன் மாதத்துக்கு பிறகு  இது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல், சளி மற்றும் தோல்கள் சிவந்து காணப்படுவது போன்றவை  பிம்ஸ் நோயின் அறிகுறியாக இருக்கிறது. இங்கிலாந்து போன்ற நாடுகளில், இத்தகைய பாதிப்புக்கு 'பிம்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த நோய் குழந்தைகளின் இதயத்தை தாக்கி, அந்த குழந்தை 20 வயதை நெருங்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்படுத்தும் அபாயம் உண்டாகும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இப்படியான சூழலில், பிம்ஸ் பாதிப்புடன் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள்  எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக கூறப்பட்டது. கொரோனாவில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் பிம்ஸ் என்ற புதிய நோய் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பனும் இந்த நோய்க்கு மருந்து இருக்கிறது என்பது சற்று ஆறுதலான  செய்தியாக இருக்கிறது.

இந்த பிம்ஸ் நோய்க் குறித்தும், இந்தியாவில் இதன் தாக்கம் மற்றும் கொரோனாவின் தாக்கம் குறித்தும் மதுரையில் உள்ள கொரோனா மருத்துவமனையில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது :
 
* கொரோனா பாதித்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக வரும் வதந்தியை நம்ப வேண்டாம்.

* தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

* கொரோனா தடுப்பூசி வரும் வரை பொதுமக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.