குறும்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் துவங்கி, திரையுலகில் சிறந்த நடிகராக உயர்ந்து நிற்பவர் நடிகர் பாபி சிம்ஹா. 2012-ம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அறிமுகமானார். 2014-ம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. கடைசியாக டிஸ்கோ ராஜா எனும் தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். 

புத்தம் புதுக் காலை ஆந்தாலஜியைத் தொடர்ந்து, பாபி சிம்ஹா நடிப்பில் சீறும் புலி, வல்லவனுக்கு வல்லவன், உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் உள்ளன. இந்தப் படங்களுக்கு இடையே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் புதிய படமொன்றிலும் நடித்து வருகிறார் பாபி சிம்ஹா. இன்று (நவம்பர் 6) சிம்ஹாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அப்படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தை ரமணன் புருஷோத்தமா இயக்கி வருகிறார். குறும்படங்கள் மூலம் கிடைத்த வரவேற்பால், பாபி சிம்ஹா இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளார். எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரித்து வரும் இப்படத்திற்கு வசந்த முல்லை எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தில் வசந்த முல்லை பாடலின் துவக்க வரிகள் தான் நினைவுக்கு வருகிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்தனர். 

பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. ஒளிப்பதிவாளராக கோபி அமர்நாத், இசையமைப்பாளராக ராஜேஷ் முருகேசன், எடிட்டராக விவேக் ஹர்ஷன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். வசந்த முல்லை படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

மேலும், தனது பெயரை இனி சிம்ஹா என்று மட்டும் குறிப்பிடும்படி படக்குழுவினருக்கு பாபி சிம்ஹா அறிவுறுத்தியுள்ளார். இதனால் வசந்த முல்லை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படக்குழுவினரின் அறிக்கை என அனைத்திலுமே சிம்ஹா என்றே உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் ராஜேஷ்வர் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் பாபி சிம்ஹா. முழுக்க முழுக்க கேங்ஸ்டர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

அது தவிர்த்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் பாபி சிம்ஹா. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் தாத்தாவான சேனாபதியை மீண்டும் காண ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். விவேக், டெல்லி கணேஷ், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் போன்ற நட்சத்திரங்கள் இதில் உள்ளனர்.