ஒரே கிராமத்தில் 2 விவசாயிகள் அடுத்து அடுத்துத் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

“விவசாயி மரணம் தேசிய அவமானம்” என்கிறார்கள் அறிஞர் பெருமக்கள். 

உலகம் முழுவதும் தொழிற் நுட்பம் அசுர வளர்ச்சி பெற்று வரும் அதே நேரத்தில், தொழில் முறையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன. இதனால், தமிழக விவசாயிகள் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளும் இனி விவசாயத்தை நம்பி உயிர் வாழ முடியுமா?” என்ற ஒற்றைக் கேள்வி தான், சமீப காலமாக விவசாய குடும்பத்தில் பிறந்தவர்களின் மனதில் எழும் கேள்வியாக இருக்கிறது. 

அதற்கு முக்கிய காரணம், நாட்டில் நிகழும் விவசாயிகளின் தற்கொலை முடிவு தான். கடந்த சில மாதங்களாக சத்தம் இல்லாமல் இருந்த தேசிய அவமானமான விவசாயிகள் மரணம், தற்போது மீண்டும் தலை எடுக்க, உயிர் குடிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆம், கர்நாடகா மாநிலம் ஹாவேரி அருகே ஒரே கிராமத்தில் 2 விவசாயிகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தான், தற்போது நாடு முழுவதும் உள்ள சக விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கர்நாடகா மாநில அரசியல் கட்சிகள், விவசாயிகள் பிரச்சனை மீண்டும் கையில் எடுக்கத் தொடங்கி உள்ளன.

அதாவது, ஹாவேரி மாவட்டம் ராணி பென்னூர் தாலுகா கெலகேரி அருகே உள்ள நிட்டூரு கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான மகேஷ் பரசல்லி என்பவர், தனக்குச் சொந்தமான நிலத்தில், விவசாயம் செய்து வந்தார். சுமார் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தில், அவர் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்தார். 

குறிப்பாக, அந்த நிலத்தில் வெங்காயம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை வளர்த்து வந்தார். இந்நிலையில், அந்த பகுதியில் சமீபத்தில் பெய்த தொடர் கடும் மழையால், வெங்காயம் மற்றும் மக்காச்சோளம் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி முற்றிலுமாக சேதமடைந்தது. இதனைப் பார்த்த விவசாயி, மகேசுக்கு நெஞ்சு பொறுக்க வில்லை. அவர், பெரிய அளவில் இதனால் நஷ்டம் அடைந்தார். 

மேலும், விவசாயி மகேஷ், விவசாயம் செய்வதற்காக வங்கிகளிலும், தனி நபர்களிடமும் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். மழையால் பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்து உள்ளதால், அவரால் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் போனது. இதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான மகேஷ், இரவு தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதே போல், அதே கிராமத்தைச் சேர்ந்த 44 வயதான விவசாயி கரியப்பண்ணவர், தனக்கு சொந்தமான நிலத்தில் வெங்காயம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிரிட்ட பயிர்களை பயிரிட்டு இருந்தார். மழையால் அந்த பயிர்களும் முழுமையாக சேதம் அடைந்தது. இதனைப் பார்த்து நிலைகுலைந்து போன விவசாயி கரியப்பண்ணவர், கடும் மன வேதனை அடைந்து மீளா துயரத்திற்கு ஆளானார். அத்துடன், விவசாயத்திற்காக வாங்கிய கடனையும், அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கொடுக்கும்படி கேட்டு விவசாயி கரியப்பண்ணவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.

இதனால், மனமுடைந்து காணப்பட்ட அவர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை சம்பவங்கள் குறித்து அங்குள்ள கெலகேரி போலீசார் தனித் தனியாக வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். 

இதனிடையே, ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து 2 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்த கிராம மக்கள் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.