நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வால் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று, மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

இதையடுத்து, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இது தொடர்பாக ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என அந்தக் குழு பரிந்துரை அளித்திருந்தது.

இந்தப் பரிந்துரையை ஆய்வு செய்த தமிழக அமைச்சரவை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்தது. கடந்த செப்டம்பரில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உள் இட ஒதுக்கீட்டுக்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா, ஆளுநர் ஒப்புதலுக்காக கடந்த செப்.18-ம் தேதி அனுப்பப்பட்டது. கடந்த அக்டோபர் 5-ம் தேதி ஆளுநரைச் சந்தித்துப் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதன்பிறகும் ஆளுநரின் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்த வழக்கு விசாரணையின்போது, "உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்த பிறகே மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும்" என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், ஆளுநர் தரப்பில் தாமதம் இருந்துவந்தது.

மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் நலன் கருதி அவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு அக். 29 பிறப்பித்தது. அந்த மசோதாவில், தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டில், அனைத்துப் பிரிவிலும் இந்த 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு இந்த 2020-21 ஆம் கல்வியாண்டு முதல் பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அக். 30 ஒப்புதல் அளித்தார்.

முன்னதாக, இந்த மசோதா குறித்து கருத்து கேட்க, கடந்த செப்டம்பர் 26-ம் தேதி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு, ஆளுநரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்திற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அக். 29 பதில் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், 7.5% உள் இட ஒதுக்கீடு மசோதா, அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணங்க உள்ளதாக துஷார் மேத்தா தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 7.5% உள் இட ஒதுக்கீடு சட்டமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.