பாஜகவின் வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி மறுத்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நவ.6ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது. கொரோனாவை காரணம் காட்டி யாத்திரைக்கு அரசு தடை விதித்திருப்பினும், தடை மீறி யாத்திரை நடக்கும் என கூறிய எல்.முருகன் சென்னையில் இருந்து இன்று காலை திருத்தணி புறப்பட்டு சென்றார். அப்போது அவரை தடுத்து நிறுத்த முயன்ற போலீசாரிடம், முருகனை தரிசிப்பது எனது உரிமை என பதில் அளித்து விட்டு சென்றார் எல்.முருகன்.

அதேநேரம், தடையை மீறி வேல் யாத்திரை நடத்தப்படும் என்று பாஜக தலைவர் முருகன் அறிவித்தார். இந்த நிலையில், சென்னையில் இருந்து யாத்திரை தொடங்க உத்தேசித்துள்ள பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தலைமையில் நூற்றுக்கணக்கான பாஜகவினர் வெள்ளிக்கிழமை காலையில் திருத்தணி நோக்கி புறப்பட்டனர்.

கையில் வேலை ஏந்தியவாறு தொண்டர்கள் சூழ வேல் யாத்திரைக்காக பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட வேனில் முருகன் சென்றார்ர். கொரோனா தொற்று காரணமாக இந்த வேல் யாத்திரைக்கு அனுமதிக்க முடியாது என்று அரசு நீதிமன்றத்தில் கூறியிருந்த போதிலும், சமூக இடைவெளியின்றி கூட்டத்தில் செல்பவர்கள் நெருக்கமாக இருந்தபடி ஊர்வலத்தில் பாஜகவினர் சென்றனர். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன்,

"எம்பெருமான் தமிழ் கடவுள் முருக பெருமாளின் வழிகாட்டுதலுடன் எங்களுடைய யாத்திரையை திட்டமிட்டபடி தொடங்கியிருக்கிறோம். எங்களுடைய வெற்றிவேல் யாத்திரைக்கு முருகபெருமான் ஆசி வழங்கியிருக்கிறார். அவரை இழிவுபடுத்திய அந்த கருப்பர் கூட்டத்துக்கும் கயவர் கூட்டத்துக்கும் இந்த வெற்றி வேல் துள்ளிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த வேல் தமிழகம் முழுவதும் உலா வரும். இந்த வேல் யாத்திரை, தமிழர்களுக்கு எதிராக, தமிழ் பண்பாட்டுக்கு எதிராக, தமிழ் கலாசாரத்துக்கு எதிராக, தமிழ் கடவுள் முருகனுக்கு எதிராக யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்களுடைய முகத்திரையை கிழிப்பதற்காக இந்த யாத்திரை புறப்பட்டிருக்கிறது

கோடிக்கணக்கான தமிழர்களின் வீடுகளில் ஒலிக்கும் கந்தர் சஷ்டி கவசத்தை இழிபடுத்தும் வகையில் ஒரு கூட்டம் செயல்பட்டபோது அதை யாரும் பெரிதாக கவனிக்கவில்லை. ஆனால், பாரதிய ஜனதா கட்சிதான் அந்த கயவர்களை அடையாளம் காண முற்பட்டது. அதன் பிறகுதான் அதில் சிலர் மீது தேசிய பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுத்தனர். ஆனால், அதன் பின்னணியில் இருப்பது யார்? அதில் பின்னணியில் இருக்கும் செந்தில் வாசன், கருப்பர் கூட்டத்துக்குப் பின்னணியில் இருந்தவர். அவர் திமுக தொழில்நுட்ப அணியில் இருந்தாரா இல்லையா? திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஏன் இதுவரை செந்தில்வாசன் பற்றிய விவரத்தை தமிழக மக்களிடம் வெளியிட மறுக்கிறார்?" என்று எல். முருகன் கேள்வி எழுப்பினார்.

ஒருவழியாக சென்னையிலிருந்து புறப்பட்ட எல்.முருகன், திருத்தணியில் வேலுடன் சாமி தரிசனம் செய்ய முயன்றார். தடையை மீறி எல்.முருகன் யாத்திரையில் பங்கேற்க முயன்றதால், அங்கு அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன், ``வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது ஏமாற்றம் அளிக்கிறது. தடையை மீறி தொடர்ந்து வேல் யாத்திரை நடைபெறும்’ என தெரிவித்தார்.