தமிழ் சினிமாவில் ஜாலியான படைப்புகள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. கிரிக்கெட் பிரியர்களுக்கு சென்னை 28, காமெடி திரில்லர் விரும்பிகளுக்கு சரோஜா, பேச்சுளர்களின் கனவு லோகத்திற்கு கோவா, தல படமா மங்காத்தா, ருசி பார்க்க பிரியாணி, திகில் கலந்து மாஸ் காட்ட மாசு என்கிற மாசிலாமணி என பல ஜானரில் பட்டையை கிளப்பும் சினிமா சைன்டிஸ்ட். இன்னும் ரசிகர்களுக்கு பார்ட்டி மட்டும் தான் வைக்கவில்லை. அதற்கு பதிலாக மாநாடு நடத்தி வருகிறார். 

சென்னை 28 படத்தின் 2-ம் பாகத்தின் வெற்றிக்கு பின்னர் வெங்கட்பிரபு இயக்கிய படம் பார்ட்டி. இதில் சத்யராஜ், நாசர், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ஜெய், சிவா, ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு பார்ட்டிக்காகக் களமிறங்கினார் வெங்கட்பிரபு. படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளியானது. ஆனால் அதன் பிறகு படத்தைப் பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லை.

படத்தின் ரிலீஸ் குறித்து இணையத்தில் பல விதமான வதந்திகள் வலம் வந்தது. இப்படம் விரைவில் ஓடிடி-ல் வெளியாகும் என்றெல்லாம் கொளுத்தி போட்டு வந்தனர் இணையவாசிகள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பார்ட்டி படத்தின் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா அவர்கள், பார்ட்டி படம் ஓடிடி-ல் ரிலீஸ் ஆகாது என்றும், விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார். 

தற்போது வெங்கட் பிரபு மாநாடு படத்தில் பிஸியாக உள்ளார். சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பு சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஹைதராபாத் விரைவதாக இருந்தனர் படக்குழுவினர். 

சமீபத்தில் இப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அதில், அனைவரும் மாநாடு அப்டேட் கேட்டு வருகிறீர்கள்...தற்போது உள்ள நிலையில், சினிமா துறை முழுவதுமே அரசின் உத்தரவுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அரசு அனுமதித்தால் மாநாடு படத்தின் படப்பிடிப்புக்கு ரெடியாகிவிடுவோம் என்று தெரிவித்திருந்தார். 

சில நாட்கள் முன்பு லைவ்வில் தோன்றிய இயக்குனர் வெங்கட் பிரபு, மாநாடு படத்தின் ஷூட்டிங் பற்றியும், முதல் பாடல் பற்றியும் பேசியுள்ளார். மாநாடு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அதிக நபர்களை கொண்டுள்ளதால், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் முதல் அதிக நபர்கள் தேவை படுகிறது. ஒரு மாநாட்டில் நடக்கும் கதை என்பதால், அதற்கு ஏற்றார் போல் செட் அமைத்து ஷூட்டிங் நடத்த வேண்டும். தற்போது உள்ள சூழலில் சமூக இடைவெளி மிகவும் அவசியம். அதனால் அரசு அனுமதித்த பிறகே, இயல்பு நிலை திரும்பியவுடன் மாநாடு படப்பிடிப்பு துவங்கும் என்று கூறியுள்ளார். மேலும் படத்தின் முதல் பாடல் ரெடி. மதன் கார்க்கியின் வரிகளில் முதல் பாடல் சிறப்பாக வந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.