“10 ஆண்டுகளில் 143 பேர் என்னை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்” என்று, இளம் பெண் ஒருவர் சுமார் 42 பக்கம் கொண்ட புகாரைக் காவல் நிலையத்தில் அளித்ததால், போலீசார் திக்குமுக்காடித் திணறிப்போனார்கள்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 25 வயதான இளம் பெண், இப்படி ஒரு புகாரை அங்குள்ள காவல் நிலையத்தில் அளித்து, அனைத்து தரப்பினரையும் அதிர வைத்துள்ளார்.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், “எனக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது என்றும், திருமணத்திற்குப் பின் என்னுடைய கணவரின் குடும்ப உறுப்பினர்கள் 20 பேரால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நான் பல முறை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானேன்” என்றும், பகிரங்கமாகக் குற்றம்சாட்டி இருந்தார்.

“இப்படி கணவரின் வீட்டாராலேயே அடிக்கடி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதால், இது குறித்துப் பல முறை என் கணவரிடம் நான் கூறியும், அவர் இதை பெரிதுபடுத்தவில்லை என்றும், இதை அவர் ஒரு பொருட்டாகவே கருத வில்லை என்றும், இதன் காரணமாக எங்களுக்குள் சண்டை வந்துகொண்டே இருந்தது” என்றும், குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாலியல் பலாத்கார கொடுமையை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், என் கணவரும் இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை என்றும், இதன் காரணமாக, திருமணம் நடந்த ஒரு வருடத்திலேயே எங்களுக்குள் விவாகரத்து ஆகி விட்டது” என்றும், பாதிக்கப்பட்ட பெண் கூறி உள்ளார்.

“விவாகரத்திற்குப் பிறகு, என் பெற்றோர் வீட்டுக்கு வந்து நான் தங்கியிருந்து மேற்படிப்பைப் படித்தேன் என்று குறிப்பிட்டுள்ள அந்த பெண், அப்படி படிக்கும் போது, என்னுடன் படித்த மாணவர்கள், அந்த பகுதி அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், என் குடும்ப உறுப்பினர்கள், அந்த பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் என மொத்தம் 139 நபர்களால் நான் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானேன் என்றும், ஒட்டுமொத்தமாக அந்த எண்ணிக்கை 143 பேர்” என்றும், அதிர்ச்சிகரமான தகவலை அந்த புகாரில் கூறியிருக்கிறார்.

குறிப்பாக, “நான் பாலியல் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான போது, என் உடலில் சிகரெட் நெருப்பால் சிலர் சூடு வைத்து என்னைக் கொடுமைப் படுத்தினர்” என்றும், அவர் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், “நான் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான விசயத்தைப் புகாராக காவல் நிலையத்தில் சொன்னால், என்னைக் கொலை செய்து விடுவேன்” என்று, என்னைப் பலரும் மிரட்டினார்கள்” என்றும், அதற்குப் பயந்தே நான் இது வரை புகார் எதுவும் சொல்லாமல் இருந்தேன்” என்றும், அவர் பகிரங்கமான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். 

மேலும், “தற்போது வாழ்க்கை மீது ஒரு வெறுப்பு வந்து விட்டது என்றும், இதன் காரணமாக தற்போது எனக்கு நேர்ந்த இந்த பாலியல் அவலங்களை 42 பக்கத்திற்கு புகாராக எழுதி பஞ்சாகுட்டா காவல் நிலையத்தில் கொடுத்துள்ளதாகவும்” பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இந்த அதிர்ச்சி ஊட்டும் புகார் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த போலீசார், “பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து பல முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளதாகவும், பலரால் பல விதமான கொடுமைகளைச் சந்தித்து உள்ளதாகவும்” தெரிவித்து உள்ளனர்.

மேலும், “பாதிக்கப்பட்ட பெண், கொலை மிரட்டலுக்குப் பயந்து புகார் கூறாமல் இருந்துள்ளார்” என்றும், போலீசார் கூறினார்.

இந்த புகார் குறித்து பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, “10 ஆண்டுகளில் 143 பேர் என்னை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்” என்று, இளம் பெண் ஒருவர் சுமார் 42 பக்கம் கொண்ட புகாரைக் காவல் நிலையத்தில் அளித்துள்ள சம்பவம், தெலுங்கானா மாநிலத்தில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.