ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 4 தனித்துவமான புதிய சாதனைகளை படைத்து உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. இதனால், சென்னை ரசிகர்கள் பெரும் அளவில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்து உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்தியாவிற்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பல்வேறு மலைக்க வைக்கும் சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார் என்பது உலகம் அறிந்த விசயம். அதே சமயத்தில், ஐபிஎல் போட்டிகளிலும் மகேந்திர சிங் தோனி, அடுக்கடுக்கான பல புதிய சாதனைகளை நிகழ்த்திக்கொண்டு இருக்கிறார் என்பதான் நம்மில் பலருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை.

அதாவது, 14 சீசன்களாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன், கேப்டன் என தொடர்ச்சியாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். இதில் குறிப்பிடத்தகுந்த விசயம் என்னவென்றால், ஐபிஎல்லில் 4 தனித்துவமான சாதனைகளை அவர் தற்போது தன் வசப்படுத்தியிருக்கிறார்.

அந்த வகையில், அந்த பட்டியிலில் முதல் இடத்தில் “சச்சின், ராகுல் டிராவிட் காலம் தொடங்கி, விராட் கோலி, ரோகித் காலகட்டங்களிலும் தற்போதைய இளம் தலைமுறையான சஞ்சு சாம்சன் கால கட்டம் வரையிலும் தோனி, கேப்டனாக வலம் வருவது ஒரு மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. அதனால், “ஜாம்பவான்கள் காலம் தொடங்கி 2021 புதிய இளம் தலைமுறைகளின் காலங்கள் வரை அனைத்து அத்தியாயத்திலும் தோனி, கேப்டனாக தனது கால் தடத்தைப் பதித்து வருவது” அந்த பட்டியில் முதல் சாதனையாக குறிப்பிட்டு உள்ளது. 

அத்துடன், “இது, தோனியின் வாழ்நாள் சாதனை” என்றே கூறப்பட்டு உள்ளது. 

அதே போல், “பேட்டிங் வரிசையில் வித்தியாசமான இடங்களில் களமிறங்கும் தோனி, அரை சதங்கள் விளாசியதே” இந்த சாதனைப் பட்டியலில் 2 வது இடம் பிடித்திருக்கிறது. 

“பேட்டிங் வரிசையில் 3,4,5,6,7 ஆகிய ஐந்து வித்தியாசமான இடங்களிலும் களமிறங்கி அரை சதம் விளாசிய வீரராக தோனி மட்டுமே இடம் பிடித்திருக்கிறார். 

ஐபிஎல் போட்டி வரலாற்றில் 20 வது ஓவர்களில் அதிக ரன்கள் விளாசிய வீரராக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனித்துவம் பெற்று உள்ளார். 

இது வரை, தோனி ஐபிஎல்லில் போட்டியில் அடித்த ரன்களில் 550 க்கும் மேற்பட்ட ரன்கள் கடைசி ஓவரான 20 வது ஓவரில் தோனி அடித்து நொறுக்கிய ரன்களே ஆகும். 

பட்டியலில் அடுத்த இடத்தில், ஐபிஎல்லில் அதிக முறை இறுதிப் போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை தோனி தனதாக்கி இருக்கிறார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வரும் மகேந்திர சிங் தோனி, இது வரை 8 முறை கேப்டனாக இறுதிப் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு புனே அணியில் சக வீரராக இறுதிப் போட்டியில் விளையாடினார். இது வரை 13 சீசன்கள் ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிந்து உள்ள நிலையில், 9 முறை இறுதி போட்டிகளில் விளையாடிய பெருமையையும், தனித்துவத்தையும் கேப்டன் தோனி பெற்று உள்ளார். தோனியின் இந்த 4 தனிப்பெரும் சாதனைகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.