சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான ஹாரர் திரைப்படம் அரண்மனை. வினய், ஹன்சிகா, சுந்தர் சி, ஆண்ட்ரியா, சந்தானம், ராய் லட்சுமி, மனோபாலா, கோவை சரளா ஆகியோர் இதில் நடித்திருந்தனர். படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அரண்மனை 2 படத்தை சுந்தர் சி எடுத்தார். இதில் சித்தார்த், த்ரிஷா, ராதாரவி, பூனம் பஜ்வா, மனோபாலா, சூரி, வைபவ், சுப்பு பஞ்சு, கோவை சரளா ஆகியோர் நடித்திருந்தனர். அரண்மனை அளவுக்கு இல்லை என்றாலும் அரண்மனை 2 படமும் லாபம் சம்பாதித்தது.

தற்போது ஆரண்மனை 3 படத்தை ஆர்யா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், சம்பத், யோகி பாபு, மனோபாலா, சித்ரா லட்சுமணன், கோவை சரளா ஆகியோர் நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ளார். முதல் இரு பாகங்களைப் போலவே குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 

லாரன்சுக்கு காஞ்சனா சீரிஸ் எப்படியோ, அதேபோல் சுந்தர் சி-க்கு இந்த அரண்மனை. 3 பாகங்களுடன் நிற்காமல் நான்கு, ஐந்து என்று அவர் பயணிப்பார் என்பதில் சந்தேகமில்லை. இதற்கிடையே இன்று அரண்மனை 3 படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிடுகின்றனர்.

அரசு படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கியது படக்குழு. இதற்காக சுமார் 2 கோடியில் பிரம்மாண்டமான முறையில் அரண்மனை போன்ற அரங்கை உருவாக்கி படமாக்கினார்கள். இந்த சண்டைக்காட்சியை பீட்டர் ஹெய்ன் வடிவமைத்தார். இதனை தொடர்ந்து படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் பொள்ளாச்சியில் நடத்தி முடித்தனர் படக்குழுவினர். 

ஓடிடி வெளியீடாக வந்த ஆர்யாவின் டெடி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் எனிமி படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை படமும் வெளியாகவுள்ளது. பா. ரஞ்சித் இந்த படத்தை இயக்கியுள்ளார்.