சிஎஸ்கே டீமை கேப்டன் தோனி இன்று மாற்றி அமைத்துள்ள நிலையில், ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தூள் கிளப்புமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எகிர வைத்துள்ளது.

14 வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னை அணி, இது வரை விளையாடியுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே போல், ராஜஸ்தான் அணியும் இது வரை 2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால், இரு அணிகளும் புள்ளிப் பட்டியலில் தலா புள்ளிகளுடன் உள்ளதால், இரு அணிகளும் நிச்சயம் வெற்றிப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

அதே போல், ஐபிஎல் அரங்கில் இரு அணிகளும் இது வரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில், சென்னை அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ள நிலையில், ராஜஸ்தான் போட்டிகளில் 9 வெற்றி பெற்று உள்ளது.

சென்னை அணியை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் செம ஸ்ட்ராங்காக தற்போது இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு அக்மார்க் ஸ்பின்னர் 
இல்லாதது சற்று பின்னடைவாகவே தற்போது பார்க்கப்படுகிறது. 

அத்துடன், இன்றைய போட்டியில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக ராபின் உத்தப்பா விளையாட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதற்கு காரணம் என்னவென்றால், சென்னை அணியில் சார்பில் விளையாடிய முதல் 2 போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட்டின் மொத்த ரன்கள் 10 மட்டுமே ஆகும். இவற்றுடன், அவர் வலைப்பயிற்சியிலும் சிறப்பாக விளையாடவில்லை என்றும் கூறப்படுகிறது. 

மேலும், ருதுராஜ் கெய்க்வாட் ஸ்விங் பால்களை எதிர்கொள்ள சற்று சிரமப்படுகிறார் என்றும் தெரிகிறது. இப்படியான நிலையில், ராஜஸ்தான் அணியில் இன் ஸ்விங் பந்துகளை அதிகமாக வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் உள்ளனர். அதனால், ருதுராஜ் கெய்வாட்டுக்கு பதிலாக ராபின் உத்தப்பா களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, ராபின் உத்தப்பா கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பாக விளையாடினார். இதனால், அவர் அந்த அணியின் பிளஸ் மற்றும் மைனஸ் விசயங்களை நன்றாக அறிந்து வைத்திருப்பார் என்றும், இவற்றுடன் சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ராபின் உத்தப்பா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக, அவர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் அவரை 3 கோடி ரூபாய்க்கு சென்னை அணி எடுத்தது என்றும் கூறப்படுகிறது.

ராபின் உத்தப்பா இன்று விளையாடுவது தொடர்பாக, ராபின் உத்தப்பா வலைப்பயிற்சி செய்யும் போட்டோவை சிஎஸ்கே அணி, தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. அதனால், இன்று ராபின் உத்தப்பா விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

அதே போல், பாஸ்ட் பவுலிங்கில் லுங்கி நிகிடி அல்லது அவருக்குப் பதிலாக ஒரு வெளிநாட்டு வீரரை களம் இறக்க சென்னை அணி முடிவு செய்துள்ளதாகவும் 
தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால், இன்று நடைபெறும் சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி 
உள்ளது.