“நாட்டு மக்கள் உயிரிழக்கும்போது ஆக்சிஜன் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது குற்றம்” என்று, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் உள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பானது 2 வது அலையாக மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

எனினும், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பானது தற்போது 3 லட்சத்தை தாண்டி உள்ளது. அதன் படி, நேற்று ஒரே நாளில் 3,14,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 

இதன் காரணமாக, இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதன் படி, நாடு முழுவதும் உள்ள முன்களப் பணியாளர்கள், முதியவர்கள், நடுத்தர வயதினர் என்று பல்வேறு தரப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி தொடர்ச்சியாகப் போடப்பட்டு வருகின்றன. 

அத்துடன், வரும் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட இருக்கிறது. 

கொரோனா 2 வது அலை நாடு முழுவதும் வேகம் எடுத்துள்ளதால், தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தையும் மத்திய - மாநில அரசுகள் தொடர்ந்து அதிகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான பயனாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

அதன்படி, “நேற்று இரவு 8 மணி நிலவர படி, இந்தியா முழுவதும் 13.22 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக” மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

மேலும், “நேற்று ஒரே நாளில் மட்டும் 21 லட்சம் டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக”  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் தான், மே 1 ஆம் தேதியில் இருந்து தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து, கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக வாங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், நேற்றைய தினம், இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் தேவை அதிகரித்து வரும் நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டது. 

அதன்படி, “அரசு மருத்துவமனைகளில் 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளில் 600 ரூபாய்க்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தனித்தனியே விலையை நிர்ணயித்து இருக்கிறது சீரம் நிறுவனம்.

இந்த நிலையில், “கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் இந்தியாவிடம் தற்போது வரை எந்த ஒரு திட்டமும் இல்லை” என்று, மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ள ராகுல்காந்தி, “கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் தற்போது வரை, இந்தியாவிடம் எந்தவித செயல் திட்டமும் இல்லை” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். 

அத்துடன், “நமது மக்கள் உயிரிழக்கும் போது, ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்வது பெரும் குற்றச்செயலைத் தவிர வேறொன்றுமில்லை” என்றும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ராகுல்காந்தியின் இந்த டிவிட்டர் பதிவு, தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.