“24 வயசுலேயே நன்றாக விளையாடுவேன் என்று நான் உத்தரவாதம் அளித்ததில்லை, அப்படியிருக்கையில் 40 வயதில் எப்படி அளிப்பது?” என்று, தனது பேட்டிங் சொதப்பல் பற்றி தோனி நியாயமான விளக்கம் அளித்து உள்ளார்.

14 வது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. 

சென்னை அணி இது வரை 3 போட்டியில் விளையாடிய நிலையில், தனது 2 வது வெற்றியை பதிவு செய்து உள்ளது. 

ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், 17 பந்துகளை எதிர்கொண்ட கேப்டன் தோனி, 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், இளம் வீரர் சகாரியாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தோனி மீண்டும் ஃபார்முக்கு திரும்பிவிட்டார் என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில், அவர் ஆட்டமிழந்தார். கேப்டன் தோனி சற்று தடுமாறியது, இந்த போட்டியிலும் எதிரொலித்தது. 

குறிப்பாக, கேப்டன் தோனி ரன் அவுட்டில் இருந்து தப்பிக்க டைவ் அடித்து க்ரீஸை தொட்டுப் பிடித்தார்.

இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் இன்று காலை முதல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனால், “கடந்த ஐபிஎல் சீசனை காட்டிலும் கேப்டன் தோனி, உடல் ரீதியாக மிகவும் உற்சாகமாகவே காணப்படுகிறார்” என்ற கருத்துக்களும் தற்போது மேலோங்கி உள்ளது.

அதே நேரத்தில், இந்த தோனி அடித்த இந்த டைவ், “கடந்த 21 மாதங்கள் தாமதமாக அடித்த டைவ்” என்று, சிலர் தோனியை விமர்சித்தனர்.

அதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்து எதிரான நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், முக்கியமான இறுதிக்கட்டத்தில் களத்தில் நின்ற கேப்டன் தோனி, ஜெயிக்க வேண்டிய நேரத்தில் திடீரென்று ரன் அவுட் ஆனார். இதனால், இந்திய அணி அந்த போட்டியில் தோல்வி அடைந்தது. 

இதனால், தோனியின் அன்றைய ரன் அவுட்டானது, இந்திய ரசிகர்களை பெரிய அளவில் கலங்க வைத்தது. 

இதனால், “தோனி நேற்றைய போட்டியில் அடித்த டைவ்வை, அன்று அடித்து இருந்தால், நிச்சயம் ரன் அவுட்டில் இருந்து தப்பித்து இருப்பார் என்றும், பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான மீம்ஸ்களும் இணையத்தில் தெறிக்கவிடப்பட்டு வருகின்றன.

இதனிடையே, போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் தோனி, “ஆட்டத்திறன் என்பது உத்தரவாதம் அளிக்கக் கூடியதல்ல என்றும், நான் எப்படி விளையாடுவேன் என்பதை என்னுடைய 24 வயதிலும் கியாரண்டி கொடுக்க முடியாது என்பதை போலவே, என்னுடைய 40 வயதிலும் என்னால் அது பற்றி உறுதிபட கூற முடியாது” என்றும், குறிப்பிட்டார். 

“ஆனால், என்னை பார்த்து இவர் விளையாட பிட்னஸ் இல்லை என யாரும் சொல்லிவிடக் கூடாது” என்று சுட்டிக்காட்டிய பேசிய தோனி, “வயசு ஆக ஆக பிட்னஸ் ஆக இருப்பது மிகவும் சிரமமான விஷயம் என்றும், இளம் வீரர்கள் இருப்பது போல் என்னுடைய பிட்னஸை வைத்துக் கொள்வேன் என்றும், அவர்கள் போல் வேகமாக ஓடுவது மிகவும் சவாலான ஒன்று” என்றும், அவர் தெரிவித்தார்.

“இளம் வீரர்களுடன் சரிசமமாக ஓட முடிகிறது என்றும், அவர்கள் வேகமாக ஓடுகின்றனர் ஆனால், அவர்களுக்கு சவால் அளிப்பது நல்லது தானே?” என்றும், தோனி கூறினார்.