“2021 ஐபிஎல் தொடரில் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தான் சாம்பியன் பட்டம் வெல்லும்” என்று, முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சிலாகித்து பேசி உள்ளார்.

கடந்த 2020 ஐபிஎல் தொடரில், அதுவரை சந்திக்காத வீழ்ச்சியைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதன் முறையாக சந்தித்தது. கடந்த சீசனில் தொடர் சொதப்பல்கள் காரணமாக, முதல் முறையாக பிளே ஆஃப் வாய்ப்பைத் தவற விட்டு மோசமான படுதோல்வியுடன், முதல் அணியாக வெளியேறியது.

ஆனால், இந்த முறை மீண்டும் சென்னையின் பலத்தை நிரூபிக்கும் விதமாக தோனியின் சென்னை படை அசுர பலத்துடன் களம் இறங்கியது. எனினும், ஒரு சில தோல்விகளைத் தவிர, தொடர்ந்து வெற்றிகளாக குவித்தது.

கடந்த சீசனில் இடம் பெறாத சுரேஷ் ரெய்னா, கடந்த சீசனின் கடைசி சில போட்டிகளில் விளையாடாமல் வெளியேறிய பிராவோ ஆகியோர் திரும்ப வந்திருப்பது சென்னை அணியின் கூடுதல் பலம். சாம் கரண், ஷர்துல் தாக்கூர், உத்தப்பா ஆகியோர் ஃபார்மில் இருப்பது சென்னைக்கு இன்னுமொரு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. 

இவர்களுடன், மொயீன் அலி இருப்பதால் ஹிட்டருக்கான இடத்தை அவர் நிரப்பி வருகிறார். ஸ்பின்னுக்குச் சாதகமான மைதானங்கள் அதிகம் இருக்கும்போது, நல்ல ஆஃப் ஸ்பின்னர் இல்லாதது சென்னை அணியின் பின்னடைவாக தற்போது இருக்கிறது. 

எனினும், 2021 ஐபிஎல் சீசனில் வீரர்களுக்கான பயோ-பபுள் பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி கொரோனா உள்ளே புகுந்துகொண்டதால், வீரர்கள், பயிற்சியாளர்களை என்று பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்றிக்கொண்டு உள்ளது. 

இதனையடுத்து தற்போதைய ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே அப்படியே நிறுத்தப்பட்டு உள்ளன. மொத்தம் 60 போட்டிகளில் 29 போட்டிகள் மட்டுமே தற்போது வரை நடைபெற்று இருக்கின்றன. 

இந்த நிலையில் 2021 ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டாலும், “இதுவரை நடந்த போட்டிகளில் சென்னை அணி தான் சாம்பியன் அணியாக விளையாடியது” என்று புகழாரம் சூட்டியுள்ளார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.

அத்துடன்,“தற்போது வரை நடைபெற்ற லீக் மட்டத்திலான போட்டிகளில் தோனி தலைமை சிஎஸ்கே, கோலி தலைமை ஆர்சிபி, ரிஷப் பந்த் தலைமை டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் தான் சூப்பராக விளையாடி இருக்கின்றன. இந்த சீசனில் இந்த 3 அணிகள் மட்டும் தான், கடும் போட்டிக்கு மத்தியில் மாறி மாறி முதலிடம் பிடித்து வருகின்றன. மற்ற அணிகள் டாப் பார்மில் இருக்க கடந்த ஐபிஎல் போட்டித் தொடரில் மிகவும் ஏமாற்றம் அளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஐபிஎல் தொடரில் டாப் அணியாகத் திகழ்கிறது” என்றும், சுனில் கவாஸ்கர் சிலாகித்துள்ளார்.

குறிப்பாக, “இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியை 3 ஆம் நிலையில் களமிறக்கி ஆடவைத்தது மாஸ்டர் பிளான் என்றும், இந்த இடது கை பேட்ஸ்மென் வெளுத்துக் கட்டி வருகிறார்” என்றும், அவர் புகழ்ந்து தள்ளி உள்ளார்.

அதே போல், “சீரான இடைவெளியில் நல்ல தொடக்கம் தரும் ஃபாப் டுபிளெசிஸ், தற்போது அடித்து தூள் பறக்க வைக்கும் பார்மில் இருக்கிறார் என்றும், இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், சேர்ந்து எதிர் அணிகளுக்கு நல்ல டாப் கொடுத்து நல்ல ஸ்டார்ட் கொடுத்து வருகின்றனர்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், “சாம் கரண் ஒவ்வொரு போட்டியிலும், நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார் என்றும், இப்போது அவர் ஒரு மிகச் சரியான ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருகிறார்” என்றும், அவர் புகழாரம் சூட்டி உள்ளார்.

அதே நேரத்தில், “சென்னை அணியில், இறுதி ஓவர் பவுலிங்கில் இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது என்றும், அதற்கு காரணம் மும்பை அணிக்கு எதிராக 218 ரன்களை சென்னை அணி எடுத்திருந்த போதும், கடைசி நேர பந்து வீச்சால் சென்னை அணி தோற்றதை தனி கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், மற்றபடி 2021 ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியனாக வருதற்கு எந்த தடையுமில்லை” என்றும், சுனில் கவாஸ்கர் சிலாகித்துக் கூறியுள்ளார்.