நடப்பு ஐபிஎல் சீசனில் மிகச் சிறந்த பவுலிங் வரிசையை கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் என்று புகழராம் சூட்டப்பட்டு உள்ளது. 

ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய முதல், கடந்த ஆண்டு நடைபெற்ற 13 வது சீசன் தொடக்கம் வரை, தனி பெரும் சாம்ராஜ்ஜியத்தையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனக்கென்று உருவாக்கி வைத்திருந்தது.

இது வரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணி என்கிற சிறப்பு பெற்ற சென்னை அணியானது, மொத்தம் 8 முறை அந்த பெருமையைத் தனதாக்கி இருக்கிறது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை கோப்பையை வென்று மகுடம் சூடியிருக்கிறது.

வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதன் முறையாக கடந்த 13 வது சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களைப் பெரிதும் ஏமாற்றியது. 

அந்த சீசனில் கொரோனா அச்சம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோர் கடைசி நேரத்தில் விலகினார்கள். இது, சென்னை அணிக்கு பின்னடைவாக அமைந்து போனது.

கடந்த ஐபிஎல் தொடரில் பங்கெடுக்காத சுரேஷ் ரெய்னா, மீண்டும் 14 வது ஐபிஎல் போட்டியில் அணிக்கு திரும்பினார்.

குறிப்பாக, சென்னை அணியில் தீபக் சஹார், லுங்கி இங்கிடி, ஷர்துல் தாக்கூர், சாம் கரன் என வேகப்பந்து வீச்சில் வரிசைக் கட்டி வீரர்கள் இந்த சீசனில் களமிறக்கப்பட்டனர்.

சென்னை அணியில், எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, டுவைன் பிராவோ, ஃபாப் டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிர், கே.எம்.ஆசிப், தீபக் சாஹர், நாராயண் ஜெகதீசன், கரன் சர்மா, லுங்கி இங்கிடி, மிட்செல் சாண்ட்னர், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், சாய் கிஷோர், ராபின் உத்தப்பா, மொயின் அலி, கிருஷ்ணப்பா கவுதம், செட்டேஸ்வர் புஜாரா, ஹரி நிஷாந்த், ஹரிஷங்கர் ரெட்டி, பகத் வர்மா ஆகியோர் கொண்ட புதிய படையுடன் தோனி தலைமையிலான சென்னை அணி இந்த சீசனில் களம் இறங்கியது.

அதன் படி, 14 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9 ஆம் தேதி தொடங்கிய நிலையில், லீக் போட்டிகள் பாதி முடிவதற்குள், வீரர்களுக்கும் கொரோனா தொற்றிக்கொண்டதால், மீதமுள்ள போட்டிகள் தேதி குறிப்பிடாமல் அப்படியே நிறுத்தப்பட்டன. 

எனினும், சிஎஸ்கே டீமை கேப்டன் தோனி மாற்றி அமைத்ததால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் தூள் கிளப்பி வருகிறது. இதனால், பழைய ஃபார்முக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் திரும்பி உள்ளதாக சென்னை ரசிகர்கள் புகழாராம் சூட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், “நடப்பு ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பவுலிங் வரிசையைக் கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் தான்” என்கிற பெருமையையும் தற்போது பெற்று உள்ளது.

அதன் படி, நடப்பு ஐபிஎல் சீசனில் 7 போட்டிகளில் இது வரை விளையாடி உள்ள சென்னை அணியின் பவுலர்கள் மொத்தம் 43 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்கள். 

முக்கியமாக சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், விக்கெட்களை மளமளவென வீழ்த்தி எதிரணியை திணறடிக்க வைத்து வருகிறார். 

அதே போல், சென்னை அணியில் அதிக விக்கெட் வீழ்த்தியவராக சாம் குர்ரன் திகழ்கிறார். இவர், 7 போட்டிகளில் 9 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். 

குறிப்பாக, சென்னை அணியின் முப்பெரும் தூண்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா, மிடில் ஓவர்களில் பந்துவீசி எக்னாமி விகிதம் 6.7 ஆக வைத்திருக்கிறார்.

விராட் கோலி தலைமையிலான பெங்களூருக்கு அணிக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜா, 13 ரன்களை கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தியது இந்த சீசனில் ஆக சிறந்த பந்துவீச்சாகப் புகழப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு சென்னை அணியில் புதிதாக இணைந்துள்ள மொயின் அலி, 12 ஓவர்கள் வீசி எக்னாமி விகிதத்தை 6.16 ஆக வைத்து இருக்கிறார்.

டெத் ஓவர் பேமஸ் வீரரான பிராவோ, சொல்லிக்கொள்ளும் படியாக விக்கெட்கள் வீழ்த்தாமல் இருந்தாலும், எக்னாமி விகிதம் 7.72 ஆக வைத்திருக்கிறார்.

அதே போல், இம்ரான் தாஹீர் இந்த சீசனில் அதிக போட்டிகளில் விளையாடவிட்டாலும், பங்கேற்ற முதல் போட்டியிலேயே 2 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

மிக முக்கியமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, நடப்பு சீசனில் சிறந்த பந்துவீச்சால் பஞ்சாப் அணியை 108 ரன்னிலும், பெங்களூரு அணியை 122 ரன்னிலும், ராஜஸ்தான் அணியை 143 ரன்களில் சுருட்டி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், நடப்பு ஐபிஎல் 2021 சீசனில், சிறந்த பவுலிங் ஆர்டரை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் தான் என்று புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது.