கொரோனா வைரஸின் தாக்கம் முதல் அலையை விட இரண்டாம் அலையில் இன்னும் தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரை கொரோனாவின் பேச்சு ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் இரண்டாம் அலையின் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது. படுக்கை வசதி ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மத்திய அரசும் மாநில அரசுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ,பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுத்தும்  வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. 

இந்நிலையில் இந்தியாவில் பல மாநிலங்கள் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. முழு ஊரடங்கும் காரணமாக பலர் வருமானத்தை இழந்து இருக்கிறார்கள். குறிப்பாக தினசரி வருமானத்திற்கு வேலைக்கு செல்வோர்,வார வருமானத்திற்கு வேலைக்கு செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் , தினசரி வருமானத்திற்காக  தமிழ் சினிமா படப்பிடிப்புகளில் வேலை செய்யும் திரைப்படத் தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். 

கடந்தமுறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது FEFSI  நிர்வாகத்தில் இருக்கும் பலரும் வருமானத்திற்காக மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் பல தமிழ் சினிமா பிரபலங்கள் FEFSI-க்கு நிதி உதவி அளித்து அதன் கீழிருக்கும் தொழிலாளர்களின்  துயர் துடைக்க உதவினர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான  நடிகர் அஜித் குமார் FEFSI நிர்வாகத்திற்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதுால் பாதிக்கப்பட்ட FEFSI தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக நடிகர் அஜித்குமார் 10 லட்ச ரூபாய் வழங்கியிருப்பதால்  FEFSI நிர்வாகமும் சினிமா தொழிலாளர்களும் தமிழ் திரைப்படத் துறையும் நடிகர் அஜீத் குமாரை வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்.முன்னதாக தமிழக முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித்குமார் 25 லட்ச ரூபாய் நிதி உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.