ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே 90-களில் உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக வலம் வந்தவர். தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ஷேன் வார்னே தன் குடும்பத்துடன் சிட்னியில் வசித்து வருகிறார். எனினும் கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

அவ்வப்போது கிரிக்கெட் போட்டிகள் மற்றும் வீரர்கள் குறித்து கருத்துக்கள் தெரிவித்து சில சமயங்களில் ஷேன் வார்னே சர்ச்சையில் சிக்குவதும் உண்டு. இந்நிலையில் நேற்று தனது மகன் ஜாக்சனுடன் ஷேன் வார்னே, 300 கிலோ எடை கொண்ட இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஷேன் வார்னே இருசக்கர வாகனம் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

SHANE WARNE CRICKET

இந்த விபத்தில் இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமுற்ற நிலையில், தற்போது மருத்துவமனையில் ஷேன் வார்னே மற்றும் அவரது மகன் ஜாக்சன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
52 வயதான ஷேன் வார்னேக்கு இந்த சம்பவத்தில் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், விபத்தில் இவரது இருசக்கர வாகனம் சுமார் 15 அடி சறுக்கிக் கொண்டு சென்றது. இதனையடுத்து அவரது இடுப்பு, பாதம், கணுக்கால் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரது மகன் தான் ஷேன் வார்னை உடனடியாக தூக்கி உறுதுணையாக இருந்துள்ளார்.  

விபத்து குறித்து ஷேன் வார்னே கூறுகையில் “நான் கொஞ்சம் அடிபட்டு, காயமடைந்துள்ளேன். மிகவும் வேதனையாக இருக்கிறேன்” என்று தெரிவித்ததாக தி ஏஜ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே 2021 டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி தி கபாவில் தொடங்க உள்ள முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான வர்ணனை செய்யும் பணிக்கு வார்னே உடனடியாக வருவாரா அல்லது 2-வது டெஸ்ட் போட்டிக்குத்தான் வருவாரா என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை.

SHANE WARNE

ஷேன் வார்னே ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் மற்றும் 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். வார்னே தனது வாழ்க்கையில் ஐந்து விக்கெட்டுகளை மொத்தம் 38 தடவை எடுத்துள்ளார். மேலும் 1996, 1999 உலகக் கோப்பையையும் வென்ற ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு தனது சிறப்பான பங்கினை வழங்கி இருந்தார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரனுக்குப் பிறகு அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய லெஜண்டரி ஸ்பின்னரான ஷேன் வார்னே வர்ணனையில் சில பல நுணுக்கமான, நுட்பமான கிரிக்கெட் தகவல்களை எப்போதும் சொல்வார். 

கேப்டன்சி, கள வியூகம் பந்து வீச்சு மாற்றம், மட்டையாளர்களின் பலவீனம் என்ன?, கால்நகர்த்தல் என்று முழுமையான தகவல்களுடன் ஷேன் வார்னே வர்ணனை செய்பவர். இப்போது விபத்தில் சிக்கி காயமடைந்திருப்பதால் முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் வர்ணனைக்கு வருவாரா என்ற ஐயம் எழுந்துள்ளது.

இதற்கிடையில் ஆஷஸ் தொடரே சிக்கலில் உள்ளது. காரணம் புதிதாகப் பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமிக்ரான் வைரஸ்தான். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் ஆஷஸ் தொடர் நடத்துவது குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இதனால் திட்டமிட்டபடி ஆஷஸ் தொடர் நடைபெறுமா என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.