தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக உலக அளவில் IMDb பட்டியலில் 9.6 புள்ளிகளுடன் ஹாலிவுட் திரைப்படங்களை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது ஜெய் பீம் திரைப்படம். தனது 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கினார்.

ஜெய்பீம் திரைப்படம், கடந்த நவம்பர் 2-ஆம் தேதி தீபாவளி வெளியீடாக அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக ரிலீஸானது. மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த அநீதிகளை பற்றியும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டும் உருவான ஜெய்பீம் திரைப்படத்தில் மணிகண்டன், லிஜோமொள் ஜோஸ், ராஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

ஷான் ரோல்டன் இசையில், S.R.கதிர் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ள ஜெய் பீம் திரைப்படம் அழுத்தமான வசனங்களோடு நெகழ்ச்சியான காட்சிகளோடு மிகச்சிறந்த கலைப்படைப்பாக ரிலீஸான நாளிலிருந்து இன்றுவரை பேசுபொருளாகவும் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

எக்கச்சக்கமான பாராட்டுகளுக்கு மத்தியில் தற்போது ஜெய் பீம் திரைப்படம் சர்வதேச அளவில் மிக உயரிய திரைப்பட விருதுகளில் ஒன்றான கோல்டன் குளோப் விருது பட்டியலில் இணைந்துள்ளது. 79வது கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பரிந்துரை பட்டியலில் ஜெய் பீம் திரைப்படம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.