2022-ம் ஆண்டு நடக்கும் 15-வது ஐ.பி.எல். டி20 சீசன் சென்னையில் ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

15-வது ஐ.பி.எல். டி20 சீசன் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. தற்போது 8 அணிகள் இருக்கும் நிலையில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட உள்ளன. இந்த 10 அணிகளுக்கான ஏலம் அடுத்த மாதத்தில் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
15-வது ஐ.பி.எல். சீசனில் அகமதாபாத், லக்னோ என்ற இந்த இரண்டு புதிய அணிகள் சேர்ந்துள்ளதால் தொடர் 60 நாட்களையும் தாண்டி நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2022-ம் ஆண்டுக்கான 15-வது ஐ.பி.எல். தொடர் எப்போது தொடங்கலாம் என்பது குறித்து நடைபெற்ற ஆலோசனையில் ஏப்ரல் 2-ம் தேதியை ஒருமனதாக தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 15-வது சீசனுக்கான ஐ.பி.எல். அட்டவணை தயாராகவில்லை என்றாலும் ஐ.பி.எல். அணி நிர்வாகங்களுக்கு பி.சி.சி.ஐ. சார்பில் இந்த தகவல் பகிரப்பட்டுள்ளதாக ஆங்கில இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இரண்டு புதிய அணிகள் வந்திருப்பதால் ஐ.பி.எல். தொடர் வழக்கமாக 2 மாத அளவு நடைபெறுவது, தற்போது 60 நாட்களையும் தாண்டிச் செல்லும் என்று தெரிகிறது. இறுதிப் போட்டி ஜூன் மாதம் முதல் வாரத்தில் அதாவது ஜூன் 4 அல்லது 5-ம் தேதி நடைபெறலாம் என்று தெரிகிறது. தற்போதைய விதிகளின் படி ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் ஆடும். 7 போட்டிகள் சொந்த மண்ணிலும் 7 போட்டிகள் வெளி மண்ணில் ஆட வேண்டும்.

c1

தற்போது கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், போட்டி விதிகள் எவ்வாறு இருக்கும் என்று இதுவரை பி.சி.சி.ஐ தகவல் தெரிவிக்கவில்லை. ஐ.பி.எல். 2021 சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியை நடத்தும் உரிமையைப் பெற்றுள்ளதால் சென்னையில் முதல் போட்டி நடைபெறும் என்பது வழக்கம். எதிரணி வழக்கம் போல் மும்பை இந்தியன்ஸ் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக ஐ.பி.எல். 2020 முழுவதும் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற, ஐ.பி.எல். 2021 தொடர் பாதி இந்தியாவிலும் பாதி ஐக்கிய அமீரகத்திலும் நடைபெற்றது. ஐ.பி.எல். 2022 சீசன் முழுவதும் இந்தியாவில் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதற்கான மெகா வீரர்கள் ஏலம் டிசம்பரில் நடைபெறும் என்று தெரிகிறது.

டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை தற்போது அடுத்தாண்டு ஐ.பி.எல். தொடரின் மீது திரும்பியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மெகா ஏலத்தால் அனைத்து அணிகளின் வீரர்களும் பெரும் வாரியாக மாற்றப்படுவார்கள். 

c3

அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடியும் என பி.சி.சி.ஐ. அறிவித்துவிட்டது. அந்த தக்கவைப்போகும் வீரர்களின் பட்டியலை வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஏலமானது டிசம்பர் மாதம் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவிருப்பதால் ஐ.பி.எ.ல் தொடர் கலைக்கட்டப்போகிறது என ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.

ஐபி.எல். போட்டியில் இருந்து ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி தக்கவைக்கப்படுவார் என சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வுபெற்ற நிலையில், அந்த அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.