போலீஸ்காரர் ஒருவரும், இளம் பெண்ணும் ஆன்லைன் மூலமாக காதலித்து வந்த நிலையில், அந்த பெண்ணிற்கு திடீரென்று திருமணம் ஆனதால், அதிர்ச்சியடைந்த அந்த போலீஸ்காரர் அந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஆயுதப்படை போலீசார் நேசமணி என்பவர் தான், திருமணம் ஆன இளம் பெண்ணை மிரட்டியிருக்கிறார்.

சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த நேசமணி என்பவர், சென்னை மாநகர் பகுதியில் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வந்தார்.

இவர், பல நேரங்களில் ஆன்லைனில் மூழ்கி கிடந்த நிலையில், பொள்ளாச்சியை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் ஃபேஸ்புக்கில் அறிமுகம் ஆகி உள்ளார்.

இதனையடுத்து, ஆயுதப்படை போலீசார் நேசமணிக்கும், அந்த இளம் பெண்ணுக்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

பின்நாட்களில் இந்த பழக்கம், அவர்களுக்குள் காதலாக மாறி இருக்கிறது. 

இப்படியாக, அவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

அப்படி, இவர்கள் இருவரும் காதலிக்கும் போது, பல இடங்களில் அவர்கள் இருவரும் சேர்ந்து சந்தித்த மற்றும் ஊர் சுற்றிய போட்டோக்களை எல்லாம் அவர்கள் எடுத்து வைத்துக்கொண்டனர்.

இந்த நிலையில் தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு, அந்த இளம் பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திடீரென்று திருமணம் நடைபெற்று உள்ளது. 

அடுத்த சில நாட்களில் இந்த விசயம் போலீசான அந்த காதலன் நேசமணிக்கு தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். 

அப்போது, “உனக்கு திருமணம் ஆனாலும், நீ என்னுடன் தான் வாழ வேண்டும்” என்றும், அந்த போலீஸ்காரர் திருமணம் ஆன அந்த இளம் பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது. 

ஆனால், அதற்கு அந்த பெண் எதிர்ப்புத் தெரிவிக்கவே, கடும் கோபகம் அடைந்த அவர் “இருவரும் காதலிக்கும் போது சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை எல்லாம்” சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார். 

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த திருமணம் ஆன அந்த பெண், முன்னாள் காதலனான ஆயுதப்படை போலீசார் நேசமணி மீது உடனடியாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இளம் பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து சென்னையில் இருந்த நேசமணியை அதிரடியாக கைது செய்து பொள்ளாச்சி அழைத்து சென்றனர்.

அதன் பிறகு, ஆயுதப்படை போலீசார் நேசமணி மீது வன்கொடுமை சட்டம் மற்றும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்தால், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவின் படி, ஆயுதப்படை போலீசார் நேசமணியை பெருந்துறை சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.