“நவீன தமிழ்நாட்டின் தந்தை கருணாநிதி” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்து பேசிய நிலையில், கலைஞர் புகழ்பாடிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தமிழில் பேசி அசத்தி உள்ளார்.

சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் சிலையை, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வாழ்வின் ஒரு பொன் நாளாக, எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இந்நாள் அமைந்து உள்ளது” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், “பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைக்கு இடையில் கருணாநிதியின் சிலை இருப்பது சிறப்பு வாய்ந்தது என்றும், இந்த அரங்கத்தை மேம்படுத்தி கலைவாணர் அரங்கம் என்று பெயரிட்டவர் கருணாநிதி” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

“கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, அன்றைய ஆட்சியாளர்களை கடுமையாக கண்டித்தவர் வெங்கையா நாயுடு என்றும், கலைஞர் சிலையை யார் திறப்பது என்று யோசித்த போது எங்கள் நெஞ்சியில் தோன்றியது வெங்கையா நாயுடு தான்” என்றும், முதல்வர் பெருமையோடு பேசினார்.

“இந்தியாவின் பல குடியரசுத் தலைவர்களை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி என்றும், கருணாநிதிக்கு எத்தனை சிலைகள் அமைத்தாலும் ஈடாகாது” என்றும், அவர் புகழாரம் சூட்டி உள்ளார்.

குறிப்பாக, “இன்றைக்கு நாம் காணக்கூடிய நவீன தமிழ்நாடு, கலைஞரால் உருவாக்கப்பட்டது என்றும், நவீன தமிழ்நாட்டின் தந்தை கருணாநிதி என்றும், எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் கோலோச்சியவர் கலைஞர்” என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

“எந்த துறை எடுத்துக் கொண்டாலும் அதில் கோலோச்சியவர் கலைஞர்; பராசக்தி, பூம்புகார், மனோகரா திரைப்படத்தின் வசனங்கள் இன்றும் நாட்டிலே ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன” என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

“என்னுடைய பாசமிகு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நன்கு அறிவார். திரையுலகத்திற்குள் வருகிறவர்கள் கலைஞரின் வசனத்தை பேசி, தங்களின் திறமையை நிரூபித்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள் என்பது வரலாறு” என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பொங்க பேசினார்.

“கருணாநிதியின் சிலையை அகற்றிய போது, அவருக்கு கோவம் வரவில்லை என்றும், மாறாக கவிதை தான் வந்தது” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

“கருணாநிதியால் கம்பீரமான, கனவுக் கோட்டையாக உருவாக்கப்பட்ட கட்டடத்திலேயே அவரின் சிலை எழுப்பப்பட்டுள்ளது; என்றும், கலைவாணர் அரங்கை உருவாக்கியவரும் கருணாநிதி தான்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாராம் சூட்டினார்.

இறுதியாக, “வாழ்க வாழ்க வாழ்கவே, தலைவர் கலைஞரின் புகழ் வாழ்கவே” என்றுக்கூறி உரையை நிறைவு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதனையடுத்து பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது” என்னும் திருக்குறளை மேற்கொள்காட்டி தமிழில் பேசி அசத்திய அவர், “இந்த குறள் கலைஞருக்கு பொருந்தும்” என்றும், கூறினார்.

தொடர்ந்து பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “கலைஞர் சிலையை திறந்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், நாட்டின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் கலைஞர் கருணாநிதி” என்றும் குறிப்பிட்டார்.

“அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கலைஞர் கருணாநிதி என்றும், இந்தியாவின் பெருமை மிக்க முதல் அமைச்சர்களில் கலைஞரும் ஒருவர்” என்றும், அவர் புகழாரம் சூட்டினார்.

“என் இளம் வயதில் கலைஞரின் உரையால் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன் என்றும், கருணாநிதி சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவர் என்றும், கலைஞர் கைது செய்யப்பட்ட போது ஜனநாயகத்திற்காக வாதாடினேன்” என்றும், அவர் தெரிவித்தார்.

“கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் தமது தரப்பு கருத்தை முன்வைப்பதில் கலைஞர் தனித்திறன் கொண்டவர் என்றும், பன்முகத்தன்மை அர்ப்பணிப்பு, உழைப்பு என பல்வேறு ஆற்றல் நிறைந்தவர் கருணாநிதி அரசியல் பதவி முள்கிரீடம் என்றும் கூறியவர் கருணாநிதி” என்றும், அவரது நினைவுகளை நினைவு கூர்ந்தார்.

குறிப்பாக, “தமிழ் சினிமாவின் புதிய அத்தியாத்தை எழுதியவர் கருணாநிதி என்றும், தமிழையும் தமிழ் பண்பாட்டையும் வளர்த்தவர் கருணாநிதி என்றும், மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்து உள்ளேன்” என்றும், அவர் பெருமையோடு நினைவு கூர்ந்தார்.

முக்கியமாக, “தாய் மொழியே இதயத்தின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும் என்றும், தாய்நாடு - தாய்மொழி வளர்ச்சி என்பது அடிப்படையானது என்றும், எந்த மொழியை எதிர்க்காவிட்டாலும் எனது மொழியை ஆதரிப்பேன்” என்றும், டியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு சூளுரைத்தார்.