ஆரம்பத்தில் இயக்குனராக அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் எஸ் ஜே சூர்யா தற்போது சிறந்த நடிகராகவும் தொடர்ந்து பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்தவகையில் கடைசியாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து S.J.சூர்யா நடித்து வெளிவந்த டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று மெகா ஹிட்டானது.

அடுத்ததாக S.J.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் கடமையை செய் திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. தொடர்ந்து தற்போது வெப்சீரிஸிலும் களமிறங்கியுள்ள S.J.சூர்யா வதந்தி வெப்சீரிஸ் விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது. வதந்தி வெப்சீரிஸில் S.J.சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து உயர்ந்த மனிதன் படத்தில் நடித்துவரும் S.J.சூர்யா அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்திலும் நடிக்கவுள்ளார்.  மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் S.J.சூர்யா நடித்துள்ள பொம்மை திரைப்படம் அடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.S.J.சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பொம்மை திரைப்படத்தை ஏஞ்சல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள பொம்மை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் பொம்மை திரைப்படத்தின் ட்ரைலர் நாளை ஜூன் 1ஆம் தேதி வெளியாகும் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் பொம்மை திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிடுவார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.