ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கேரளா சினிமா மேல் காதல் கொள்ள வைத்த பிரேமம் திரை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. தமிழில் தியா, மாரி 2, NGK உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சாய்பல்லவி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளிவந்த பாவக் கதைகள் ஆந்தாலஜி வெப் சீரிஸில் ஒரு எபிசோடில் நடித்திருந்தார். 

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகை சாய் பல்லவி நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் விரட்ட பர்வம். இயக்குனர் வேணு உடுகுலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் விரட்ட பர்வம் படத்தில் சாய்பல்லவி மற்றும் ராணா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் பிரியாமணி, நந்திதாதாஸ், நவீன் சந்திரா, ஈஸ்வரிராவ், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் விரட்ட பர்வம் படத்திற்கு டேனி சான்சேஸ்-லோபஸ் மற்றும் திவாகர் மணி ஒளிப்பதிவு செய்ய சுரேஷ் பாபி இசையமைத்துள்ளார். 

முன்னதாக விரட்ட பர்வம் திரைப்படம் வருகிற ஜூலை 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு வருகிற ஜூலை 17ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.